×
Saravana Stores

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

மாண்புமிகு உறவுகள்!

உறவுகள் அனைத்துமே நம்மை தாங்கிப்பிடிக்கும் விழுதுகள். சில உறவுகள் தன் குடும்பமாகவே பாவித்து, வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்வர். சிலர் வராமல் எந்த ஒரு சிறிய குடும்ப விழாவும் நடைபெறாது என்கிற அளவுக்கு முதன்மை படுத்திக் கொள்வர். வசதிகள் இல்லாத காலகட்டத்தில், நம் எதிர்பார்ப்புகளும் உறவினரை எதிர்பார்த்தே நடந்தேறியது எனலாம். ஆனால் இன்றைய காலகட்டம் அனைத்திற்கும் வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. மொத்தமாக அனைத்திற்கும் பணம் கட்டி விட்டால் போதும். அவர்களே அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.

அந்தந்த சடங்குகளின் பொழுது, அதற்குப் பிரதானமானவர் ஆஜர் ஆனால் போதும். குறிப்பாக மாமா அனைத்திற்கும் முதன்மையானவராக ஏற்கப்படுவார். நிறைய தொலைக்காட்சிகளில் கூட, நாம் தாய்மாமாவின் சிறப்பை பல்வேறு ேகாணங்களில் கண்டுள்ளோம். அவர்கள் செய்யும் சீர் வரிசைகள் கூட முதன்மை படுத்தப்பட்டது. அவர்களிடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்  உறவைக் காப்பாற்றி, குலப் பெருமையை நிறுத்துவதற்காக கடன் பட்டாவது சீர் வரிசைகளை செய்தார்கள். இன்றைய நிலை அப்படியில்லை. எல்லோருக்கும் புரிந்து நடந்து கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது. யாரும் இவ்வளவு வேண்டும், அவ்வளவு தேவை என்றெல்லாம் கேட்பதில்லை. அனைவரிடமும் வசதி வாய்ப்புகள் வந்துவிட்டன. ஆனால் பாசம் மட்டும் கிடைப்பதில்லை.

ஒரு கிராமத்தில் எத்தனையோ மாட்டு வண்டிகளில் சீர் எடுத்து வந்தார்களாம். இன்றும், கிராமங்களில் அண்டா, தவலை, குடம் போன்ற பாத்திரங்களில் சீர் வரிசை வைக்கிறார்கள். வாழைப் பழங்கள் தாருடன் மற்ற பழங்கள் கூடை நிறைய வைப்பதும் வழக்கமாக இருக்கிறது. யாருமே எந்த சீர் வரிசையும் கேட்பதில்லை. ஆனாலும் பாரம்பரிய வழக்கத்தை அவர்கள் விடுவதற்கு விரும்புவதில்லை. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு மாமா, தன் அக்கா பெண்ணுக்கு பதினைந்து பவுன் நகை போட்டாராம்.

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்குக்கூட பதினைந்து பவுன் போடுவது வசதி இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். மூன்று நான்கு மாமாக்கள் இருக்கும் குடும்பத்தில் பங்கு போட்டுக் கொண்டு செய்வர். தங்கள் சீர் வரிசைகள்தான் முதலில் இடம் பெற வேண்டும் என்று நினைப்பார்கள். மாமாக்கள் தங்கள் சுயகௌரவத்தை தக்கவைப்பதற்காக கடன் வாங்கி சீர் செய்ய முன் வருவர்.

இப்பொழுதெல்லாம் பையனும் பெண்ணும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துதான் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. அவர்கள் முடிவெடுத்தபின் தான், தாய் – தந்தையருக்கு தெரிய வருகிறது. அந்தக் காலத்தில் திருமணங்கள் சிறு வயதிலேயே நடந்துவிடும். குழந்தைகளும் சீக்கிரம் பிறந்து விடுவார்கள். பேரன், பேத்தி எடுத்தாலும் தாத்தா, பாட்டி சிறியவர்கள் போலவே தெரிந்தார்கள். சில சமயம் அம்மா, மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம் நடைபெறுவதும் அந்தக் காலத்தில் இயல்பாக பார்க்கப்பட்டது.

மகளும் பேத்தியும் சேர்ந்து விளையாடுவார்கள். அதே சமயம் வீட்டில் மாமா என்பவர் வயதில் பெரியவராக இருந்தாலும், நடக்க வேண்டிய கடமைகள், மாமா சீர்கள் அனைத்தும் ஒழுங்காக நடைபெறும். குடும்ப விசேஷங்கள் குறித்தும் அவரிடம் சென்று ஆலோசனை செய்து பிறகுதான் நடைபெறும். குடும்பத்தில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கான சடங்குகள் அனைத்தும் மாமாவின் முன்னிலையில்தான் நடக்கும். இரு பக்கமும் கலந்து பேசி, நியாயமான முறையில் நல்ல காரியங்களை நடத்தி வைப்பதுதான் அவரின் கடமை. உறவினர்கள் சரியான முடிவை அவரிடம் பெற்றுத்தான் நிச்சயிப்பார்களாம். நூறுக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் அவர்கள் வாரிசுகள் திருமணங்களும் குடும்ப வீட்டில்தான் நடைபெறும்.

அவர் காலத்திற்குப் பிறகு, அவர்கள் மகன்கள் அதை தொடர்வார்கள். ஆயிரம் திருமணங்கள் கண்ட ராசியான வீடு என்று சொல்வார்கள். புதிய வசதிகள் அனைத்தும் அந்த வீட்டில் வந்து விட்டாலும், பாரம்பரியமும் பழமையும் மாறக் கூடாது என்பதற்காக வீட்டின் அமைப்பை மாற்றாமல் வைத்திருப்பார்கள். காலங்கள் மாறினாலும், மாமாவின் பொறுப்பு பரம்பரையாக இன்றும் தொடர்கிறது.

இன்றைய காலகட்டம், உறவுகளும் நட்பாகப் பழகுவது என்பது நடைமுறையில் காணப்படுகிறது. அப்பொழுதெல்லாம் நட்புகளும் உறவாகி, குடும்ப அங்கத்தினர்களாக மாறி ஒருமித்து செயல்பட்டனர். ஆனால், இன்று குடும்பத்துக்குள் நட்பாக பழகினால் எந்தவித பாகுபாடுமின்றி உறவுகள் ஓங்கும். அப்பாவும் பையனும் தோள் மீது கை போட்டு, உல்லாசமாக பேசிக் கொண்டு போவதுதான் உறவு. ஒரு சமயத்தில் அப்பா, மாமா இவர்களை நெருங்கிப் பேசுவது கூட இயலாமல் இருந்தது. காரணம், அவர்கள் மேல் இருக்கும் மரியாதை. பிள்ளைகளுக்கு வீட்டிற்குள் பாசம் தரும் உறவுகள் நிறைந்து காணப்பட்டதால், அத்தகைய விஷயங்கள் பிரதானமாக கருதப்படவில்லை.

ஏதேனும் காரியம் நடைபெற வேண்டுமானால், அம்மா, பாட்டி, தாத்தாக்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வார்கள். பையனுக்கோ, பெண்ணுக்கோ ஏதாவது தேவை ஏற்பட்டால், அம்மா காதில் போட்டு விட்டால் போதும்! காரியம் வெற்றிதான். அது போல் மாமாவிடம் கேட்க நினைக்கும் விஷயங்களையும் அம்மாவிடம் சொன்னால், அவர்கள் சுமுகமாகப் பேசுவார்கள். பையனோ-பெண்ணோ திருமண வயதை அடைந்து விட்டாலே, கூட்டுக் குடும்பங்களில் யார் வேண்டுமானாலும் வரன் பார்ப்பார்கள்.

நெருங்கிய உறவுகள் கலந்து பேசி நல்லது எது என்று ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். ஒரு குடும்பத்தில் பெண் ஒருத்தி காதலித்து திருமணம் செய்ய நினைத்தாள். குடும்பத்தினர் எதிர்க்கவே, தூரத்து உறவினர் ஒருவர் முன்னின்று கன்னிகாதானம் செய்து கொடுத்து திருமணம் முடித்துத் தந்தார். அவர்கள் முன்னேற்றம் கண்டு, நெருங்கிய உறவினர்கள் ஒவ்வொருவராக சேர ஆரம்பித்தனர். உறவுகள், பாசம் அழிக்க முடியாதது. கோபத்தில் பிரிவது உண்மை பிரிவாகாது. பாச பந்தம் என்பதுதான் நம்மை இணைக்கும் பாலம்.

வயதில் சரிசமமாக இருக்கும் உறவினர்களை அல்லது வயது குறைந்த உறவினர்களை நண்பர் போல் பாவித்து பழகுவது இன்று காணப்படுகிறது. இப்பொழுது தாய்மாமா, சித்தப்பா என அனைத்து உறவுகளும் நண்பர்கள் போல் பழகுகிறார்கள். கிரிக்கெட் கூட ஒன்றாக விளையாட விரும்புகிறார்கள். உறவுகள் உடன் பிறந்த குடும்பங்களைக்கூட தாங்கிப் பிடித்தார்கள். அப்போது அது மாண்புமிகு உறவுதானே!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED திருப்பம் தரும் திருப்புகழ்!