×

ஜாக்கிங் செய்தபடி சிட்டியை கிளீன் பண்ணலாம்!

நன்றி குங்குமம் தோழி

“6ம் வகுப்பு படிக்கும்போதுதான் நான் கடைசியாக பொது இடத்தில் குப்பையை வீசினேன். அப்போது என் டீச்சர் குப்பைகளை இப்படி போடக்கூடாது. ஒரு பொருளை நீ பயன்படுத்திய பிறகு கழிவுகளான சாக்லேட் பேப்பர், பிளாஸ்டிக் கவர்கள், மற்ற குப்பைகளை தூக்கி எறியாமல் குப்பைத்தொட்டியில்தான் போடவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் என்னை ஊக்கப்படுத்தினார்.

அப்போதிலிருந்தே எப்போதும் ஒரு குப்பை பை வைத்திருப்பேன். கண்ணிற்கு எட்டும் தூரம் வரை அருகே குப்பைத்தொட்டி இல்லாத போது, குப்பைகளை என் கையில் இருக்கும் குப்பை பையில் போட்டுக் கொள்வேன். அதன் பிறகு குப்பைத் தொட்டியை பார்க்கும் போது, அதில் அந்த குப்பை பையை போட்டுவிடுவேன்’’ என்கிறார் சென்னை ப்லாகெர்ஸ் (Chennai Ploggers) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாந்தினி.

இவர் இந்த அமைப்பினை தொடங்கி வழிநடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வேலையே ஜாக்கிங் செய்துகொண்டே பொது இடங்களில் இருக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றி சென்னை நகரத்தினை சுத்தம் செய்வது தான். இப்படி ஒரு விஷயத்தினை கேள்விப்படும் போதே அவர்களை பாராட்டுவதோடு மட்டுமில்லாமல் அவர்களுடன் சேர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இந்த செயலில் நாமும் பங்கேற்க வேண்டுமென்றே தோன்றுகிறது அல்லவா? ஷாந்தினியும் இப்படித்தான் நண்பர் ஒருவரின் செயல் மூலம் ஊக்கமடைந்து அவரும் இப்படியொரு அமைப்பினை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு தீங்கினை விளைவிக்கும் கழிவுகளை அகற்றி வருகிறார். இந்த அமைப்பை தொடங்கியதின் நோக்கத்தினை பற்றி ஷாந்தினி பகிர்ந்து கொள்கிறார்.

“ஒரு தீவிரமான அமைப்பினை உருவாக்கி வெகு வேகமாக குப்பைகளை அகற்றும் பணிகளை நாங்க செய்வதில்லை. ஆர்வமுள்ள இளைஞர்கள் கூட்டமைப்பாக
ஒன்றிணைந்து ஜாலியாக பேசிக் கொண்டு ஜாக்கிங் செய்தபடியே குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தோம். நான் இந்த அமைப்பினை ஆரம்பித்த போது அப்படித்தான் செய்தேன். அதைப் பார்த்து சிலர் என்னுடன் பங்கேற்றனர். அடுத்த முறை மேலும் சிலர் எங்களுடன் இணைந்தார்கள்.

தற்போது எங்கள் அமைப்பில் 200 பேர் உள்ளனர். குப்பை பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியது மற்றும் செய்ய முடியாத குப்பைகள் இருக்கும். ஆனால் பெரும்பாலும் நாங்கள் சேகரிக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள், பாட்டில் மூடிகள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவை அதிகமாக இருக்கும். இது போன்ற குப்பைகளை அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். மட்காத குப்பைகள் நிலத்தில் சேரும் போது அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பொதுமக்கள் பலருக்கும் இது பற்றின விழிப்புணர்வும் இருப்பதில்லை. குப்பைத் ெதாட்டிக்குள் இடம் இருந்தாலும், குப்பைகளை வெளியே போட்டுவிட்டு செல்கிறார்கள். இது போன்ற அலட்சியமான செயல் நம்மை மட்டுமின்றி அடுத்து வரும் சந்ததியினருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நிலத்தில் உள்ள குப்பைகள் ஏதாவது ஒரு வழியில் கடலுக்குள் சென்று கலந்து விடும். இதனால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். பிளாஸ்டிக் கழிவுகளை தேங்கவிடாமல் தடுத்தாலே கடலில் கழிவுகள் சேர்வதை தடுக்கலாம். இதன் காரணமாகவே நிலத்தில் கிடக்கின்ற கழிவுகளை அகற்றும் இந்தப் பணியினை தொடங்கியுள்ளோம்’’ என்றவர் குப்பை சேகரிக்கும் முறை குறித்து விவரித்தார்.

‘‘நாங்க எல்லோரும் ஜாலியாக சிரித்து பேசியபடி ஜாக்கிங் செய்து கொண்டே குப்பைகளை சேகரிப்போம். பின்னர் அவற்றை இரு வகைகளாக பிரிப்போம். அதில் மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை குப்பைக் கிடங்கில் கொடுத்துவிடுவோம். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சுத்தம் செய்து அதற்கான கிடங்குகளில் சேர்த்துவிடுவோம். குப்பைகளை பிரித்தெடுப்பதில்தான் நாங்கள் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். எந்த ஏரியாவை சுத்தம் செய்யப்போகிறோம் என்று தேர்வு செய்திடுவோம். அதன் பிறகு குப்பைகளை சேகரித்து பிரிப்போம். குப்பைகளை சேகரிப்பவரே அதனை பிரித்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் சேகரிக்கும் குப்பைகளை ஓரிடத்தில் அமர்ந்து பிரிக்க எங்களுக்கு சரியான இடம் கிடைப்பதில்லை என்பது மட்டும் தான் நாங்கள் தற்போது சந்திக்கும் பிரச்னையாக உள்ளது.

நாங்கள் இது போன்ற செயலை செய்யும் போது எங்களை பார்க்கின்ற பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் நாங்கள் செய்யும் பணிகளை புகைப்படங்களாக எடுத்து அவர்களின் அக்கம்பக்கத்தினரிடமும் எங்கள் அமைப்பினை பற்றி சொல்லி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஒரு தனிநபராக இருந்து இது போன்ற செயல்களை செய்வதைவிடவும் ஒரு குழுவாக சேர்ந்து இதனை செய்யும்போது இதைப்பற்றின விழிப்புணர்வு மக்களிடம் சென்று சேருகிறது. குப்பைகளை அகற்றும் செயல்களை பார்க்கின்ற குழந்தைகளும் மாணவர்களும் இதில் பங்கேற்க முன் வருகிறார்கள். இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

ஒவ்வொரு பகுதியிலும் சென்று குப்பைகளை போடாதீர்கள் என்று விழிப்புணர்வு செய்வதை விட, நாம் செய்யும் நற்செயல்களை பார்த்து மற்றவர்களும் தானாகவே செய்ய தொடங்கும்போது அதைப்பற்றின விழிப்புணர்வு பரவலாக சென்றடையும். நாங்களாக யாரையும் வற்புறுத்த மாட்டோம். ஆர்வமுடன் வருபவர்களை தடுக்க மாட்டோம்” என்றவர் இந்த அமைப்பினை தொடங்குவதற்கு ஊக்கமாக இருந்தவர்களை பற்றியும் பகிர்கிறார்.

“முதலில் என் டீச்சர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது என்பது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் எனக்குள் ஏற்படுத்தினார். நான் ஆசிரியராக பணிபுரியவும் அவர்தான் காரணம். நான் இந்த அமைப்பை தொடங்க காரணமாக இருக்கும் மற்றொரு நபர் விவேக் குராவ். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சி நிர்வாகியாக பங்கெடுத்திருந்தபோது அவரை சந்தித்தேன்.

அவர் புனே ப்லாகெர்ஸ் அமைப்பு மூலம் இது போன்ற குப்பைகளை அகற்றும் பணிகளை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. நண்பர்கள் குழுவாக இணைந்து இந்த வேலையை செய்து வருகிறார்கள். இதுவரை 15000 டன் கழிவுகளை அகற்றியுள்ளனர். இந்த அமைப்பினை சென்னையிலும் தொடங்கலாமேன்னு அவரிடம் கேட்டபோது, நீயே ஒரு அமைப்பினை தொடங்கி இதனை செய்யலாமே என்று எனக்கு ஊக்கம் கொடுத்ததின் விளைவு தான் சென்னை ப்லாகெர்ஸ் உருவாக காரணம்.

நான் எல்லோருக்கும் சொல்ல நினைப்பது ஒன்றுதான். பொது இடங்களில் குப்பைகள் போடுவதை தவிர்க்க வேண்டும். சாக்லெட் சாப்பிட்ட கவரினை குப்பைத் தொட்டியில் போட தேடும் போது உங்கள் அருகில் இல்லை என்றால், அதனை பைகளில் வைத்திருந்து குப்பைத்தொட்டியை பார்க்கும் போது போடலாம். ஒவ்வொருவரும் தயங்காமல் இதனை செய்ய வேண்டும். நீங்கள் செய்வதை பார்க்கும் மற்றவர்களும் இந்தப் பழக்கத்தை கடைபிடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஒரு தனிநபர் செய்யும் சிறு முயற்சிகள்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.

மும்பையில் நடந்த மாநாடு ஒன்றில் பொது இடங்களை சுத்தம் செய்யும் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து நான் மட்டும்தான் சென்றிருந்தேன். இது வருத்தமடைய செய்தது. நம் மாநிலத்திலும் இது போன்ற பல அமைப்புகள் செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் இதனை செய்து வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் அமைப்பில் சேர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஈடுபடலாம்” என்கிறார் ஷாந்தினி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post ஜாக்கிங் செய்தபடி சிட்டியை கிளீன் பண்ணலாம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வரும் முன் காப்போம்!