×

வெட்டிங் பிளானிங் செய்வதே த்ரிலிங்கான வேலைதான்!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு கல்யாணம் என்றால் அனைவரின் பார்வை மணப்பெண் மற்றும் மணமகன் மீது தான் இருக்கும். கல்யாணத்திற்கான அலங்காரம், கல்யாணம் நடக்கும் இடம், பரிமாறப்படும் உணவுகள் குறித்து பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டார்கள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு என அந்த இரண்டு நாட்களும் கடந்துவிடும். ஒரு திருமணம் என்றால் பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமி, அத்தை, சித்தி, பெரியம்மா என வீட்டில் உள்ள அனைவரும் வேலை செய்வார்கள்.

ஆனால் இன்று அப்படி இல்லை. யாருக்கும் வேலையை செய்ய நேரமில்லை. இவர்களின் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்பவர்கள்தான் வெட்டிங் பிளானர்ஸ். ஆனால் அவங்க என்ன வேலை செய்றாங்கன்னு யாருக்கும் தெரிவதில்லை. அதை மக்களுக்கு உணர்த்ததான் நாங்க இந்தக் கண்காட்சியை நடத்தினோம்’’ என்கிறார்கள் துரியா செலிபிரேஷனஸ் வெட்டிங் பிளானரின் உரிமையாளர்களான மதுமிதா மற்றும் பாலாஜி னிவாசன்.

‘‘நானும் பாலாஜியும் குடும்ப நண்பர்கள். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஈவென்ட் பிளானராக ஆக வேண்டும்னு ஆசை. வீட்டில் நானும் என் தம்பியும் ஒரு கல்யாணத்தை பிளான் செய்வது போல்தான் எப்போதும் விளையாடுவோம். அது அப்படியே என் மனசில் பதிந்தது. படிச்சு முடிச்சதும் இது போன்ற ஒரு நிறுவனம் ஆரம்பிக்கணும்னு எண்ணம் இருந்தது. ஆனால் மார்க்கெட்டில் இது குறித்து விசாரித்த போது குறிப்பாக தென் தமிழகத்தில் வெட்டிங் பிளானிங் என்றால் பலருக்கு தெரிவதில்லை. வெட்டிங் பிளானர்ன்னு சொன்னா அவங்க புதுசா பார்க்கிறாங்க. ஒரு வெட்டிங் பிளானரின் வேலை என்ன? அவர்கள் என்னெல்லாம் செய்வார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க விரும்பினோம். அதற்காகத்தான் நாங்க இந்தக் கண்காட்சியை நடத்தினோம்’’ என்றவரை ெதாடர்ந்தார் பாலாஜி.

‘‘என் குடும்பத்திற்கும் திருமணத்திற்கும் நிறைய கனெக் ஷன் இருக்கு. கிட்டத்தட்ட 45 வருஷமா நாங்க கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அது எங்களின் குடும்பத் தொழில். அதில் இருந்து ஒரு படி மேலே செல்ல என்ன செய்யலாம்னு யோசித்தேன். கல்யாணத்திற்கு சாப்பாடு பரிமாறலாம். ஆனால் அதே கல்யாணத்தை மொத்தமா எடுத்து செய்தால் என்ன என்று சிந்தனை ஏற்பட்டது. அதற்கு நான் வெட்டிங் பிளானரா மாறணும்.

எனக்கு கேட்டரிங் துறையில் அனுபவம் இருந்தாலும், ஒரு கல்யாணத்திற்கு சமையல் மட்டுமில்லாமல் என்னெல்லாம் அவசியம் என்று தெரியும். மதுமிதாவிற்கு இது போன்ற துறையில் தொழில் செய்ய விருப்பம் என்பதால், நாங்க இருவரும் சேர்ந்து இதனை செயல்படுத்த திட்டமிட்டோம். அப்படித்தான் துரியா செலிபிரேஷன் ஆரம்பமாச்சு. எங்க நிறுவனத்தின் USP சாப்பாடு, அலங்காரம், போட்டோகிராபிக்கு தனியாக வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை எங்க நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார்ன்னு சொல்வாங்க. அவங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான். திருமண தேதி குறித்துவிட்டு இருவீட்டாரும் எங்களை சந்திக்க வருவார்கள். அதன் பிறகு அந்த வைபோகம் சுபமாக முடியும் வரை அனைத்து பொறுப்பும் எங்களுடையதாக மாறிடும். அவர்கள் ரிலாக்ஸாக கல்யாணத்திற்கு வந்தால் மட்டுமே போதும் என்பது போல் அனைத்து வேலைகளையும் நாங்க பார்த்துக் கொள்வோம். இதில் சிலர் டெஸ்டினேஷன் வெட்டிங் கேட்பாங்க. திருமண மண்டபம் முதல் சேலை அலங்காரம், மேக்கப், உடைகள், ஹனிமூன் பேக்கேஜ் வரை அனைத்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம். ஒரு சிலருக்கு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதற்கு ஏற்பவும் செய்து தருகிறோம்.

முன்பு கல்யாணம் குறித்து பெற்றோர்கள்தான் என்ன செய்யலாம்னு முடிவு செய்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. மணமக்கள்தான் அதை தீர்மானிக்கிறார்கள். பெற்றோர்கள் சடங்குகள் குறித்து மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள். மேலும் இந்த கல்யாண நிகழ்வுகள் எல்லாம் கஸ்டம் மேட் அதாவது ஒவ்வொருவரின் விருப்பம் என்பதால், அதற்கு ஏற்ப செய்து தருகிறோம். சிலர் அலங்காரம் பிரமாண்டமாக இருக்கணும், சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அவசியமில்லைன்னு சொல்வாங்க. ஒரு சிலர் அப்படியே நேரெதிரா இருப்பாங்க. சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவாங்க. ஒருவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.

அதற்கான நிறைய சாய்ஸ் இருக்கு. சிலர் குறிப்பிட்ட சில கேட்டரிங்தான் வேண்டும்னு கேட்பாங்க. அதற்கான ஏற்பாடும் செய்கிறோம். எங்களின் கேட்டரிங் முழுக்க முழுக்க சைவம். ஆனால் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ கல்யாணத்தில் கண்டிப்பாக அசைவ உணவுகளைதான் விரும்புவாங்க. அந்த நேரத்தில் அவர்களுக்கான தனிப்பட்ட கேட்டரிங் ஏற்பாடும் செய்கிறோம். எங்களின் சேவையினை சென்னை மட்டுமில்லாமல் கோவை, ஈரோடு, மதுரை, டெல்லி, மும்பை என பான் இந்தியா முழுக்க செய்து தருகிறோம்’’ என்றார் பாலாஜி.

‘‘கல்யாணம் செய்வது என்பது கூடுதல் பொறுப்பு. மணமக்களின் குடும்பத்தினர் எங்களை சார்ந்துதான் இருப்பாங்க. அவர்களுக்கு ஒரு தேவை என்றால் அதை நாங்கதான் பூர்த்தி செய்ய வேண்டும். கோவையில் ஒரு கல்யாணம் நடத்தினோம். மணமக்கள் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்புதான் வந்தாங்க. கல்யாண மண்டபம், மேக்கப் எல்லாம் ஜும் காலில்தான் பேசி முடிவு செய்ேதாம். அதுமட்டுமில்லாமல் அவர்களின் உறவினர்களுக்கு நாங்கதான் பத்திரிகையை நேரடியாக கொடுத்தோம்.

ஒருமுறை கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடும் செய்தாயிற்று. ஆனால் காசி யாத்திரைக்கு போக மாப்பிள்ளைக்கு செருப்பு வாங்க மறந்துட்டாங்க. விடியற்காலை முகூர்த்தம். மாப்பிள்ளை வீட்டில் இருந்து இரவு 12 மணிக்கு போன், செருப்பு வாங்க மறந்துட்டோம்னு. நானும் பாலாஜியும் விடியற்காலை ஐந்து மணிக்கு செருப்பு கடை ஒன்றை திறக்க வைத்து வாங்கி வந்தோம். இது போல் நிறைய சம்பவங்கள் நடத்திருக்கு. ஆனால் அதை எல்லாம் சமாளிப்பதே மிகவும் த்ரிலிங்கான அனுபவமா இருக்கும்.

எதிர்கால திட்டம் எங்க இருவருக்கும் நிறைய இருக்கு. நிறைய டெஸ்டினேஷன் வெட்டிங் செய்யணும். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் துரியா
கால் பதிக்கணும்’’ என்றனர் இருவரும் கோரஸாக.

தொகுப்பு: ஷம்ரிதி

The post வெட்டிங் பிளானிங் செய்வதே த்ரிலிங்கான வேலைதான்! appeared first on Dinakaran.

Tags : Thrilling ,Dinakaran ,
× RELATED வரும் முன் காப்போம்!