கரூர், நவ. 15: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடை மாபெரும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல் தடுப்பு தினம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து நவம்பர் 14ம் தேதியன்று குழந்தைகள் நடை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி, தாந்தோணிமலை கல்லூரி வரை சென்றது. இந்த பேரணியில் புலியூர் செட்டிநா இன்ஜினியரிங் கல்லூரி, அன்னை அரபிந்தோ நர்சிங் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை மற்றும் ஒலிபெருக்கி முலம் விழிப்புணர்வு வாசகங்களை தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் தலைமையில் குழந்தைகள் தினத்தை முன்னிடடு குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர், குழந்தைகள் உரிமைகள் காத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பாக குழந்தைகள் தின விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தை மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள், குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டரின் குழந்தைகள் தின விழா வாழ்த்து மடல் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள வாழ்த்து மடலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வாசித்து காட்ட அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செழியன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, சமூக நல அலுவலர் சுவாதி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.