சென்னை: கிண்டி சிறப்பு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி, என் உடல் நிலை சீராக உள்ளது என வீடியோ வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜியை, பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் மருத்துவர் பாலாஜி தலை, முதுகு என உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவர் பாலாஜி பேசும் வீடியோவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் மருத்துவர் பாலாஜி கூறியிருப்பதாவது: என் உடல் நிலை சீராக உள்ளது. நலமுடன் இருக்கிறேன். இதயம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. மேலும் என் இதயத்தை ஒரே சீராக வைக்க பேஸ்மேக்கர் ஏற்கனவே வைத்து இருந்தேன். அதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதுமட்டுமின்றி எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளது. காயத்தில் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார். மேலும், மருத்துவர் பாலாஜி உடல் முன்னேற்றம் அடைந்து சீராக உள்ளது. குறிப்பாக அவரே உணவு சாப்பிடும் அளவிற்கு உடல் நலமாக உள்ளது. ஏற்கனவே அவருக்கு இதய பாதிப்பு உள்ளதன் காரணமாக இதயவியல் சிறப்பு மருத்துவ குழுவினரும் சிகிச்சை வழங்கி வருகின்றனர் என கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையின் இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
The post என் உடல் நிலை சீராக உள்ளது: கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி பேசும் வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.