84. க்ருதயே நமஹ (Krutaye namaha)
பாத்மபுராணத்தின் ஐந்தாவது கண்டமான பாதாள கண்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவம். அயோத்தியை ராமன் ஆண்டு வந்த காலத்தில் வசிஷ்டர், அகஸ்தியர் ஆகிய இரு ரிஷிகளையும் கொண்டு கங்கைக் கரையில் அச்வமேத யாகம் செய்தான் ராமன். லாயத்தில் கட்டப்பட்டிருந்த பல குதிரைகளுள் ஒன்றை யாகத்தில் பலியிடுவதற்காக அகஸ்தியர் தேர்வு செய்தார். அந்தக் குதிரையை உலகெங்கும் சுற்றி வருவதற்காக அவர்கள் அனுப்பிய போது ராமனின் மகன்களே அதைச் சிறைபிடித்த வரலாறும், அது மீட்கப்பட்ட வரலாறும் வாசகர்கள் அறிந்ததே.
யாகத்தின் இறுதிக்கட்டத்தில் குதிரை பலியிடப்பட வேண்டும். அப்போது ராமன் விதிப்படித் தன் வாளை எடுத்துக் குதிரையை வெட்டப் போனான். ஆனால் அந்தக் குதிரை காற்றில் மறைந்து விட்டது. இதென்ன ஆச்சரியம் என்று அகஸ்தியரைப் பார்த்தான் ராமன். ஆனால் அதற்குள் அங்கே பொன்மயமான ஒரு விமானம் தோன்றியது. அதில் ஒரு தேவன் அமர்ந்திருந்தான். அவன் ராமனை நோக்கிக் கைகூப்பி, “பிரபுவே! நான் வேதம் கற்ற அந்தணன். கங்கைக் கரையில் ஒரு வேள்வி செய்துகொண்டிருந்தேன்.
அப்போது துர்வாசர் அந்த வழியாக வந்தார். என் ஆணவத்தால் அவரைக் கண்டும் காணாதவன் போல இருந்துவிட்டேன். அதனால் யாகத்தில் பலியிடப்படும் மிருகமாக நான் பிறக்கவேண்டும் என்று துர்வாசர் என்னைச் சபித்தார். நான் சாப விமோசனம் கேட்ட போது ராமனின் கரம் உன் மேல் பட்டதும் உன் சாபம் தீரும் என்றார். இப்போது உம்முடைய அருளால் சாப விமோசனம் பெற்றேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தேவலோகம் சென்றான்.
இப்போது அகஸ்தியர் ராமனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர் இந்தக் குதிரையைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை ராமன் புரிந்துகொண்டான். “ஆனால் மகரிஷியே! யாகம் பூர்த்தி அடையாமல் இப்படி நின்று போய்விட்டதே! யாகத்தைப் பாதியில் நிறுத்துவது பெரும் பாபம் என்று நீங்கள் அறிவீர்கள். மேற்கொண்டு எப்படி இதை நிறைவு செய்வது?” என்று அகஸ்தியரிடம் கேட்டான் ராமன். உடனே பதில் சொல்ல முடியாமல் அகஸ்தியரும் சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது வசிஷ்டர்தம் சிஷ்யர்களை அழைத்து நெய்தீபம் எடுத்து வரச் சொன்னார். நெய் தீபத்தைக் கொண்டு ராமனுக்கு ஆரத்தி காட்டினார் வசிஷ்டர். “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான் ராமன்.“ராமா! எந்தச் செயலாக இருந்தாலும் அதைச் செய்விப்பவன் நீ. நீ செய்விக்காவிட்டால் உலகில் ஏதும் நடக்காது. நீயின்றி ஓரணுவும் அசையாது. அனைத்துச் செயல்களையும் நீ இயக்குவதால் நீயே செயல் – ‘க்ருதி:’ என்றழைக்கப்படுகிறாய். எனவே அனைத்துச் செயல்களின் வடிவில் இருப்பவனான உனக்கு மங்கல ஆரத்தி காட்டிவிட்டபடியால், அச்வமேத யாகமாகிய இந்தச் செயல் இனிதே நிறைவடைந்ததாகப் பொருள்!” என்றார் வசிஷ்டர்.
தொடர்ந்து அவர் மங்கல ஆரத்தி காட்ட, அத்தனைத் தேவர்களும் பூமிக்கு வந்து, “தேவாதி தேவனே, ராமா நீயே செயல், நீயே செய்விப்பவன்!” என்று ராமனைத் துதித்தார்கள். யாகம் செய்வதால் எப்படி நாங்கள் மகிழ்வோமோ, அதே மகிழ்ச்சியை உனக்குக் காட்டப்பட்ட மங்கல ஆரத்தியைத் தரிசித்தவாறே நாங்கள் பெற்றுவிட்டோம் என்றும் சொன்னார்கள் தேவர்கள்.
செய்விப்பவராகவும் செயல்வடிவில் இருப்பவருமான திருமால் ‘க்ருதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 84-வது திருநாமம். “க்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தொடங்கும் அனைத்து நல்ல செயல்களும் இனிதே நிறைவடையும்படிதிருமால் அருள்புரிவார்.
The post அனந்தனுக்கு 1000 நாமங்கள் appeared first on Dinakaran.