இந்நாளில் திருக்களாவூர் என்றழைக்கப் படும் திருக்குருகாவூர் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இவ்வூருக்கு வடகிழக்கில் சுந்தரர் தங்கியிருந்தபோது சிவபெருமான் அந்தணர் வடிவில் சென்று அவருக்குத் தயிர்சாத மூட்டையை அளித்தான். பிறகு வேட வடிவில் வந்து ஆலயத்திற்கு வழிகாட்டி விட்டு மறைந்தார். சுந்தரர் ‘வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே’ என்று அருளிச் செய்துள்ளார். சிவபெருமான் வேடவடிவில் வந்த இடம் இந்நாளில் வேட்டங்குடி என்று அழைக்கப்படுகிறது. வேடமூர்த்தியின் திருவுருவம் ஆலயத்தில் உள்ளது.
அம்பிகையின் ஆயுதங்கள்
தன் திருவடியைத் தஞ்சமடையும் உயிர்களை மாயையில் இருந்து மீட்பவள் அம்பிகை. பக்தர்களைக் காப்பதற்காகத்தான் ஒரு கையை அபய முத்திரையாக வைத்திருக்கிறாள். அம்பிகையின் கையில் காட்சி தரும் பாசம் (கயிறு) அங்குசம், சூலம் மற்றும் நீலோத்பல மலர் ஆகிய ஒவ்வொன்றும் ஓர் ஆயுதம்தான்! ஒவ்வொன்றுக்கும் ஓர் மறை பொருள் உண்டு: மனிதனை பாவங்களில் இருந்து மீட்பது பாசம்; ஆணவத்தை அடக்குவது அங்குசம்; அவர்களை தீய வழிக்கு இழுத்துச் செல்லும் சக்திகளை அழிப்பது சூலம்; இவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட மனிதனுக்கு நல்வாழ்வைத் தருவது நீலோத்பல மலர்.
குச்சி நிழலில் மணி பார்த்தல்
வேலூருக்கு அருகில் உள்ள திருத்தலம் ‘விரிஞ்சிபுரம்.’ இத்தலத்தில் இருக்கும் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் ஒரு கல் நடப்பட்டு, அதன் உச்சியில் ஒரு குச்சி வைக்கப்பட்டுள்ளது. அந்தக்குச்சியின் நிழலை வைத்து மணி என்ன என்று கண்டுபிடிக்கிறார்கள். இது ஒரு அபூர்வ கடிகார அமைப்பாகும்.
அதிகார முருகன்
பொன்னேரி அருகேயுள்ள ஆண்டாள் நம்மத்தில் பாலசுப்பிரமணியர் வேல், சக்தி, வஜ்ஜிரம் என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். அருகில் இரு யானை வாகனங்கள்
உள்ளன. அதிகாரத் தோரணையுடன், காட்சி தருவதால் இவரை ‘அதிகார முருகன்’ என்பர்.
நிறம் மாறும் சிவலிங்கம்
கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சுமார் 103 கி.மீ. தூரத்தில் ‘விருபாக்ஷி’ என்ற தலத்தில் அமைந்துள்ள விருபாக்ஷீஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள மூல லிங்கம் காலை வேளையில் செந்நிறமாகவும், நண்பகலில் வெண்மையாகவும், சந்தியா காலத்தில் தேன் நிறத்துடனும் காட்சி தரும் அதிசயத்தைத் தரிசிக்கலாம். கருவறை முன் நின்று கைகூப்பி வணங்கும்போது லிங்கத்திலிருந்து வெளிப் படும் ஆற்றல் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் கூறப்படுகிறது.
அரிய அமைப்பில் வேலவன்
பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருத்தலம் ‘‘கரம்பயம்’’ என்னும் கிராமம். இத்தலத்தில் பக்தர்கள் வேண்டியதை வழங்கும் முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. முருகப் பெருமான் சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் வேல் வாங்கி, திருவாரூர் வன்மீகநாதர் சுவாமி ஆலயத்தில் பிரார்த்தனை செய்து பின்னர் கரம்பியம் தலத்து முத்து மாரியம்மன் ஆலயத்தில் தங்கி வழிபட்டு திருச்செந்தூர் திருத்தலத்து சூரசம்ஹாரத்திற்கு சென்றதாக ஐதீகம். இத் திருக்கோயிலின் உற்சவ அம்மனின் வலது புறம் வேலும், இடது புறம் பழனி ஆண்டவரும் வீற்றிருப்பது இதற்குச் சான்றாக விளங்குகிறது. மேலும் இதுபோன்ற அமைப்பு தமிழ்நாட்டில் எந்த அம்மன் திருக்கோயிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லேந்திய சனீஸ்வரர்!
கரந்தையில் உள்ள சிதாநந்தேஸ்வரர் கோயில் மகா மண்டபத்தின் மேற்கு திசையில் சனி பகவானுக்கு சிறு சந்நதி அமைக்கப் பட்டுள்ளது. இங்கு சனி பகவான் நின்ற கோலத்தில் மேற்கையில் அம்பும், வில்லும் பிடித்து கீழ் வலக்கையில் திரிசூலம் ஏந்தி, இடக்கையில் வரத முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.
கதலிவனம்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக் குளம்பூர் திருத்தலத்தில் இருக்கிறது ‘ஸ்ரீகதலி வனேசுவரர் திருக்கோயில்’. இத்தலத்து தலவிருட்சம் வாழைமரம். இத்திருக்கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வளர்கின்றன. இம்மரங்களுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. மேலும் இம்மரங்களில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பஞ்சாமிர்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ராதாகிருஷ்ணன்