வரத்து குறைவு, தொடர் முகூர்த்தம் எதிரொலி; மல்லிகை விலை ‘மளமள’ உயர்வு: கிலோ ரூ.2,000க்கு விற்பனை


திண்டுக்கல்: வரத்து குறைவு, தொடர் முகூர்த்தம் காரணமாக திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டுகளில் மல்லிகை விலை கிலோ ரூ.2,000 வரை விற்பனையானது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணா பூ மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை, பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து குறைந்துள்ளது.

இன்றும், நாளையும் சுபமுகூர்த்த நாட்கள் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவாலும் நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,850 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது. இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.100, ரோஜாப்பூ ரூ.100, முல்லை பூ ரூ.650, ஜாதி பூ ரூ.500, கனகாம்பரம் ரூ.1,000, கோழிக்கொண்டை ரூ.70, செண்டுமல்லி ரூ.60, காக்கரட்டான் ரூ.600, செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.120, வாடாமல்லி ரூ.20 முதல் ரூ.40, மரிக்கொழுந்து ரூ.100, மருகு ரூ.120, அரளி ரூ.150, விருச்சிப்பூ ரூ.70, தாமரைப்பூ ரூ.10க்கு விற்பனையாகிறது.

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் மல்லிகை பூ கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. ஆனால் நேற்று வரத்து குறைவு, தொடர் முகூர்த்தம் காரணமாக மல்லிகை பூ கிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது. கார்த்திகை மாதத்தில் பூக்களின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதாலும் மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post வரத்து குறைவு, தொடர் முகூர்த்தம் எதிரொலி; மல்லிகை விலை ‘மளமள’ உயர்வு: கிலோ ரூ.2,000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: