×

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவரால் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்ற மருத்துவரை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து தற்போது தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது மருத்துவர் பாலாஜி நலமாக இருக்கிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல்துறையினாரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல். இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்கள் அனைவர் மீதும் அக்கறை கொண்டது இந்த அரசு. அவர்களுக்குத் தேவையான உரிய பாதுகாப்பினை கண்டிப்பாக, உறுதியாக வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார்.

தலைப்பகுதியில் நான்கு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ஏற்பட்ட காயம், இடது கழுத்துப் பகுதிகளில் ஒரு காயம், இடது தோள்பட்டையில் ஒரு காயம், இடது காதுமடலில் ஏற்பட்ட ஒரு காயம். இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் எல்லாம் உடன் இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தார்கள் வந்திருக்கிறார்கள். குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறோம். அவருடைய தாயார், மனைவி ஆகியோர் உடன் உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்.

அந்த தாயாருக்கு சரியான முறையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த மருத்துவர் சொன்னதை வைத்து, காலையில் கூட இங்கு மருத்துவரிடம் அரை மணி நேரம் பேசியிருக்கிறார், உடன் நர்ஸ் இருந்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு தவறான முடிவை எடுத்திருக்கிறார். இது தவிர்க்கமுடியாத சம்பவம். இனிமேல், இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மருத்துவர் பாலாஜிக்கு சரியான சிகிச்சை அளித்து அவரை மீட்டெடுப்பதுதான் முதல் பணி. அனைத்து மருத்துவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Deputy ,Chief Minister ,Udhayanidhi Stalin ,Doctor ,Balaji ,Kindi Kalaihari Centenary Higher Specialty Hospital ,
× RELATED தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் இன்று!!