நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , நீர்வளத்துறையிடமிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணியினை இன்று (13.11.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் பாலம் அருகில் ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ச்சியாக, கோடம்பாக்கம் மண்டலம், தியாகராய நகர், தெற்கு உஸ்மான் சாலையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் ரூ.164.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது : எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து நிலையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி தயார்நிலையில் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 01.10.2024 முதல் 12.11.2024 வரை 437.35 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று (13.11.2024) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 26.89 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் 47.40 மி.மீ. மழை அளவும், குறைந்தபட்சமாக அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி பகுதியில் 9.60 மி.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை எந்த இடத்திலும் மழைநீர் தேக்கம் ஏதுவுமில்லை. சிறிதளவு தேங்கிய மழைநீரும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஒரு மரம் விழுந்துள்ளது. அந்த மரமும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 120 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் இரயில்வே மேம்பாலப் பணி காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,324 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 8 மோட்டார் பம்புகள் தற்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 15.10.2024 அன்று மழைக்காக 100 குதிரைத் திறன் கொண்ட 88 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டது.
தற்போது 100 குதிரைத் திறன் கொண்ட 134 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கடந்த மழைக்கு மோட்டார் பொருத்தப்பட்ட 243 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது மோட்டார்கள் பொருத்தப்பட்ட 466 டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன. மழைக்காலத்தினை முன்னிட்டு, 15.10.2024 முதல் 11.11.2024 வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,193 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1,19,888 நபர்கள் பயனடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயார்நிலையில் உள்ளனர். கடந்த மழையின் போது 12,300 தன்னார்வலர்கள் பதிவு செய்த நிலையில் தற்போது வரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னைக் குடிநீர் வாரியத்தின் 73 எண்ணிக்கையிலான சூப்பர் சக்கர் இயந்திரங்கள், மற்ற மாநகராட்சி/நகராட்சி/மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 85 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. நீர்வளத்துறையிடமிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை கால்வாய் ஆகிய 3 கால்வாய்களிலும் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஓட்டேரி நல்லா கால்வாயில் 1000 டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது. 10 கி.மீ. நீளத்திற்கு வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்வாய்கள் கடலில் சேரும் இடத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் பாலத்தினை உயர்த்தி கட்ட வேண்டும். அங்கு செல்லும் மின் ஒயர்களை சரிசெய்ய வேண்டும். இவை சரிசெய்யப்பட்டால் இந்தப் பகுதிகளில் நீர்த்தேக்கம் ஏற்படாது.
இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் முடிக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் மற்றும் அலுவலர்கள் மழை காரணமாக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தப் பணிகளில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலை வெட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும். கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் வெட்டப்பட்டுள்ள குளங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் மழைநீர்த்தேக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், வேளச்சேரி ஏரிகளில் வரத்துக்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரிக்கும் செல்லும் நீர் மற்றும் தென்சென்னையில் செல்லும் நீர் ஆகியவை இந்தக் குளங்களில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
The post எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து நிலையிலும் மாநகராட்சி தயார்நிலையில் உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.