சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் தொடரும் நெரிசல்

*ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

திட்டக்குடி : திட்டக்குடி – விருத்தாசலம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் அவலநிலை உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து தொழுதூர் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும், திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன.

திட்டக்குடி சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் மற்றும் அவர்களது வீடுகளில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகளுக்கும் திட்டக்குடிக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

திட்டக்குடிக்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்த நெடுஞ்சாலையை பலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் வாகன ஒட்டிகள் சாலையில் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.

அப்பகுதியில் போக்குவரத்து காவல்நிலையம் அமைத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். காலை மற்றும் மாலை வேலைகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் அப்பகுதியில் காவலர்களை நியமிக்க வேண்டும். திட்டக்குடி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

இங்கு 90 முதல் 110 அடி வரையுள்ள சாலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. பெரும்பான்மையான பகுதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. அதுமட்டுமின்றி திட்டக்குடியில் இருந்து பெருமுளைக்கு செல்லும் சாலை பொதுமக்கள் நடக்கவே முடியாத அளவிற்கு சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.

கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்ல வேண்டுமென்றால் 20 நிமிடங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அந்த நேரத்தில் போக்குவரத்து முற்றிலும் தம்பித்து விடுகிறது.
எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும் என்றும், சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் தொடரும் நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: