×

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொன்று சாக்குமூட்டையில் கட்டி குட்டையில் வீச்சு

வானூர், நவ. 13: கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி குட்டையில் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் சாக்குமூட்டை ஒன்று நேற்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பிரித்து பார்த்தபோது சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் இருந்தது. அவரை யாரோ கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கல்குவாரி குட்டையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், கொலை செய்யப்பட்ட பெண் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த புருசோத்தமன் மனைவி இளவரசி (38) என்பது தெரியவந்தது. மேலும் இத்தம்பதிக்கு 18 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ள நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இளவரசி தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்தது தெரியவந்தது. இந்நிலையில், புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளவரசி வேலை செய்த நிலையில் இவருக்கும், வானூர் அடுத்த திருவக்கரையில் உள்ள குவாரியில் லாரி டிரைவராக வேலை செய்து வரும் கிருஷ்ணப்பன் என்ற ராஜூ (44) என்பவருக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சமீபகாலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 4ம் தேதி இளவரசி தனது பிள்ளைகள் இருவரையும் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்தாராம். பின்னர் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில், 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இளவரசி மாயமானார். குழந்தைகளும், உறவினர்களும் அவருக்கு போன் செய்தபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கவே தொடர்பு கொள்ள முடியாததால் நெட்டப்பாக்கம் போலீசில் 10ம் தேதி இரவு இளவரசியின் தாய் ஆதிலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் மிஸ்சிங் பிரிவில் வழக்குப்பதிந்து மாயமான இளவரசியை தேடி வந்தனர்.

இதற்கிடையே இளவரசிக்கும், லாரி டிரைவர் ராஜூவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து, கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் ராஜூ, கடந்த 9ம் தேதி இளவரசி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சாப்பாடு தயார் செய்யாததால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ கையால் அடித்துள்ளார். பின்னர் அவரது கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கிய நிலையில் பிணமாகவே, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வாகனத்தில் எடுத்துச்சென்று திருவக்கரையில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து நெட்டப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக மாற்றியமைத்து தலைமறைவான லாரி டிரைவர் ராஜூவை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், எஸ்ஐ வீரபத்திரன் தலைமையிலான போலீசார் நகர பகுதியில் பதுங்கியிருந்த ராஜூவை சுற்றிவளைத்தனர். அவரிடம் தனிப்படை அதிரடியாக விசாரணை மேற்கொண்டதில் இளவரசியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி உடலை வீசியதை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொன்று சாக்குமூட்டையில் கட்டி குட்டையில் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Vanur ,Kalkwari pond ,Thiruvakarai, Vanur taluka, Villupuram district ,
× RELATED போலீஸ் தடையை மீறி பெண் சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்த கிராம மக்கள்