தாய்லாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு கடத்தி வந்த உயர் ரக கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: தாய்லாந்திலிருந்து டெல்லி வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹80 லட்சம் மதிப்பு 1.5 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பயணி மற்றும் அதை வாங்க வந்த 2 பேர் என 3 பேரை சென்னை மாநகர கஞ்சா போதை தடுப்பு சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து டெல்லி வழியாக, சென்னைக்கு உயர் ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக, சென்னை மாநகர கஞ்சா போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா போதை தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் தனிப்பட்டனர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து, டெல்லியில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தபோது, சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாரூக் (30) என்பவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவரிடம் விசாரித்தபோது, தாய்லாந்திலிருந்து டெல்லிக்கு வந்துவிட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் சென்னை வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பயணி முகமது பாரூக் உடமைகளை பரிசோதித்த போது, ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா சுமார் 1.5 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ₹80 லட்சம். தனிப்படை போலீசார், முகமது பாரூக்கை கைது செய்து, விசாரித்த போது, இந்த போதைப்பொருளை தாய்லாந்து நாட்டிற்கு சென்று வாங்கி வரும்படி, சென்னையைச் சேர்ந்த 2 பேர், என்னை குருவியாக தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அங்கிருந்து நேரடியாக சென்னை வராமல், டெல்லி வழியாக சென்னைக்கு வரும்படியும் கூறி இருந்தனர். அதன்படி நான் டெல்லி வழியாக, உள்நாட்டு விமானத்தில் சென்னைக்கு வந்தேன் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பயணி முகமது பாரூக் செல்போனை ஆய்வு செய்தபோது, அவருடைய செல்போனிலிருந்து 2 பேரிடம் தொடர்ச்சியாக பேசி இருந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் முகமது பாரூக்கை, அந்த எண்களோடு தொடர்பு கொண்டு பேசி, சென்னை விமான நிலையத்துக்கு வரவழைத்தனர். அதன்படி பாருக் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதும், சென்னையைச் சேர்ந்த கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த 2 பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு சாதாரண உடையில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த தனிப்படை போலீசார், அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அதன்பிறகு அவர்களிடம் விசாரித்த போது, இந்த கஞ்சா அதிக போதை உடையது. மிகவும் விலை உயர்ந்தது. கல்லூரி மாணவர்கள், உயர் வர்க்கத்தினர் இதை பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இது கடத்திக் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் கைது செய்த மூன்று பேரையும், சென்னை மாநகர காவல் ஆணையரகத்துக்கு அழைத்து சென்று, மேலும் விசாரித்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வழியாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட உயர்ரக போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தாய்லாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு கடத்தி வந்த உயர் ரக கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: