×

தின… தின… தின… தீபாவளி!

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி ஸ்பெஷல் சாக்லேட்ஸ்!

‘‘குட்டி ஜப்பான் சிவகாசி என்றதுமே தீபாவளி பட்டாசும், புத்தாண்டு காலண்டரும்தானே நினைவில் வரும். இனி கூடுதலாக எனது சாக்லேட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என இன்டர்நேஷனல் பிராண்டிற்கே டஃப் கொடுத்து சாக்லேட்களை தனது வீட்டில் வைத்து ஹோம் மேட் வெரைட்டியாகத் தயாரித்து பான் இந்தியா ஸ்டாராய் சாக்லேட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார் ராதா.

சாக்லேட் ராணியாய் இவர் தயாரிக்கும் ஹோம்மேட் சாக்லேட்டுகள் தமிழகம் தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, குஜராத், அஸ்ஸாம் என இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் பறக்கிறது. சாக்லேட் தயாரிப்பில் பட்டையைக் கிளப்புவது குறித்து ராதாவிடம் பேசியதில்…

‘‘எனக்கு ஊர் சிவகாசி. சாதாரணமாக வீட்டில் தொடங்கிய என் சாக்லேட் தயாரிப்பு இன்று மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட், டார்க் சாக்லேட் என்ற அடிப்படையில், 18 விதமான ஃபிளேவரில் வலம் வருகிறது’’ என்றவர், ‘‘எனது தயாரிப்பு சாக்லேட் சுவைக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தையே அடிமையாக்கி வச்சுருக்கேன்’’ எனப் புன்னகைக்கிறார்.

‘‘நான் இருப்பதோ சிவகாசியில். ஆனால் இந்தியா முழுக்க என் சாக்லேட்ஸ் போய் சேருகிறது என்றால், இருக்கும் இடத்திலேயே நமக்கான அடையாளத்தை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்ள முடியும். தேவை கொஞ்சம் மெனக்கெடல்’’ என்றவர், ‘‘இதற்கு நானே உதாரணம். இன்றுள்ள சோஷியல் மீடியா ப்ளாட்ஃபார்ம்ஸ் அந்த அளவுக்கு வாய்ப்புகளை நமக்கு நேரடியாகவே உருவாக்கிக் கொடுக்கின்றது’’ என்றவாறு மேலே பேச ஆரம்பித்தார்.

‘‘சமையல் செய்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். விதவிதமான ரெசிபிகளை எப்போதும் புதுசு புதுசாக முயற்சிப்பேன். அதனாலேயே மதுரை ஃபாத்திமா கல்லூரியில், எனது விருப்பம் போல ஹோம்சயின்ஸ் பி.எஸ்.ஸி பட்டப் படிப்பை படித்து முடித்தேன். கூடவே பெயின்டிங், டிராயிங், கிராஃப்ட் வொர்க்குன்னு ஆர்டிஸ்டுக்காக என்னவெல்லாம் இருக்கோ அது எல்லாவற்றையும் ஆர்வமாக செய்யத் தொடங்கினேன். எனக்குப் பாடவும் வரும். எனது குரலில் பாடி பதிவேற்றிய பாடல்களை பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு சி.டி.யாகக் கொடுத்திருக்கிறேன்’’ என தன்னை அறிமுகம் செய்து கொண்டவரிடத்தில், அவரின் தனித்துவமான சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டபோது…

‘‘முதலில் ஏதோ செய்யப் போகிறோம் என நினைத்துதான் இதில் இறங்கினேன். அதுவரை நான் சாதாரண ஹவுஸ் வொய்ஃப்தான். ஆரம்பித்த முதல் இரண்டு மாதங்கள் பெரிதாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. இருந்தாலும் முயற்சியை நான் கைவிடவில்லை. மனம் தளராமல் பொறுமையாக பல்வேறு ஃபிளேவர்களில் சாக்லேட்களை செய்து பார்க்கத் தொடங்கி, இறுதியில் என் சாக்லேட் தயாரிப்புக்கான ஃபார்முலாவை கண்டுபிடித்தேன். இது முழுக்க முழுக்க என் முயற்சி, எனது கண்டுபிடிப்பு’’ என்றவர், நாம படித்த படிப்பும் நமது திறமையும் என்றைக்கும் வீணாகாது என்கிறார் அழுத்தமாக.

‘‘என் அளவுக்கு யாரும் சாக்லேட்டை டாப்பிங்ஸ் செய்து தயாரிச்சு இருக்க மாட்டார்கள். மில்க் சாக்லேட், வொயிட் சாக்லேட், டார்க் சாக்லேட் என மூன்றுவிதமான முறையில் சாக்லேட் தயார் செய்வதுடன், அதன் மேல் டாப்பிங்ஸ் பொருட்களாக ட்ரை நட்ஸ், பெரிஸ், ட்ரை ஃப்ரூட்ஸ், பிஸ்கெட்ஸ், சாக்லேட் மேல் சாக்லேட் என 18 விதமான ஃபிளேவர்ஸ்ஸில் வெரைட்டியாக டாப்பிங்ஸ் செய்கிறேன். இது பலரையும் கவர, ஒவ்வொரு டாப்பிங்ஸுக்கும் தனித்துவமான பெயர்களுடன் மெனு கார்டும் தயாரானது.

‘உனக்குப் பிடித்த ஃபிளேவரை நீயே தேர்ந்தெடு’ என்பதில் வாடிக்கையாளர்களிடம் ஒரு ஆர்வம் இருக்கிறது’’ என்றவர், ‘‘எனக்கு நட்ஸ்ல டாப்பிங் வேண்டும்… எனக்கு பிஸ்கெட்ல… எனக்கு பெர்ரியில… எனக்கு ட்ரை ஃப்ரூட்ஸ்… எனக்கு சாக்லேட்ஸ் என தங்கள் ஃபிளேவர் டாப்பிங்கை வாடிக்கையாளரே தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

என் முக்கியமான ஸ்பெஷலே கிறிஸ்துமஸ் டே, நியூ இயர் டே, வாலண்டைன்ஸ் டே, ரக்ஷாபந்தன் டே, பெர்த்டே, லவ்வர்ஸ்பேக், செலிபிரேஷன் பேக், பெர்ஷனலைஸ் மெசேஜ் பேக், ஹேப்பி தீபாவளி, நியூ இயர் என கொண்டாட்ட தினங்களுக்கு விதவிதமான சாக்லேட் கிஃப்ட் பாக்ஸ்களையும், செலிபிரேஷன் பேக்குகளையும் அறிமுகப்படுத்துவதுதான். குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் இது ரீச்சாக, பிறந்தநாளுக்கு பெயரை சாக்லேட் மேல எழுத ஆரம்பிச்சு அதுவும் மிக நன்றாக ரீச் ஆனது. அவரவருக்குப் பிடித்த பெயர்களை சாக்லேட்டில் எழுதச் சொல்லி ஆர்டர் பண்ண ஆரம்பித்தார்கள்.

பிறந்தநாள் கிஃப்ட் பேக் மீது குறிப்பிட்ட நபர் புகைப்படத்தை போஸ்டர் செய்து, அவரின் கேரக்டரை வெளிப்படுத்தும் வாசகங்களை பேக் மீது பிரின்ட் செய்து, உள்ளே ‘ஹேப்பி பர்த்டே’ என எழுதிய சாக்லேட்டுடன், பெயர் எழுதிய சாக்லேட்டையும் கிஃப்ட் பேக்காக்கி, பிடித்தமானவர்களிடம் இருந்து அவரின் கைகளில் கிடைக்கப் பெற்றால், அன்றைய தினம் அவருக்கு மகிழ்ச்சிதானே’’ என்றவர், ‘‘இந்த ஆண்டுக்கான தீபாவளி செலிபிரேஷன் சாக்லேட் பேக்கினை பெரிய சைஸில் சிலாப்பாகத் தயாரித்துள்ளேன். ஒரு சாக்லேட்டின் அளவு மட்டுமே 460 கிராமில் ஹேப்பி தீபாவளி என சாக்லேட்டின் மீது எழுதப்பட்டிருக்கும்’’ என தீபாவளி மத்தாப்பாய் புன்னகைக்கிறார் ராதா.

‘‘என் தயாரிப்பின் ஸ்பெஷலே யுனிக்னெஸ்தான். ஹோம்மேட் சாக்லேட் என்றாலும் அதையும் புரொபஷனலாக வாடிக்கையாளர்களிடம் சேர்க்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்களின் பேக்கிங்கைப் பிரிக்கவே 10 நிமிடங்கள் எடுக்கும். அந்த அளவுக்கு சாக்லேட் பக்காவா உடையாமல் நீட் அண்ட் டைட்டாக பேக் ஆகி, கண்களைக் கவரும் விதத்தில், வாடிக்கையாளர்கள் கரங்களை போய் சேருகிறது.

என் வளர்ச்சியில் எனது கணவருக்கும், எனது மகன்களுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. ஆரம்பத்தில் இது தேவையா என்ற எனது கணவர், தற்போது என் முயற்சியை பார்த்து எனக்கு நிறைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் எனது மகன்கள் இருவரும், சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மை பயன்படுத்தி என் தயாரிப்பு சாக்லேட்களை இந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தொடக்கத்தில் தொழிலை புரோமோட் செய்வது, ஆர்டர் எடுப்பது, ஆன்லைன் டெலிவரி என எதுவும் எனக்குத் தெரியாது. மகன்கள் இருவரும்தான் எனது சாக்லேட்டுகளை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி, பார்வையாளர்களையும், ஃபாலோவர்ஸையும் எனக்கு அதிக அளவில் பெற்றுத் தந்தனர். ‘தி சாக்லேட் பார்’ என்கிற என் சாக்லேட் நிறுவனத்தை வெப்பில் டிசைன் செய்தது, இன்ஸ்டா புரோமோஷன், வாட்ஸ்ஆப் ஆர்டர் என அத்தனையும் எனக்காக ஆரம்பத்தில் செய்தது எனது மகன்கள்தான். முதல் 8 மாதம்தான். பிறகு எல்லாவற்றையும் நானே கற்று செய்யத் தொடங்கிவிட்டேன்…’’ மில்க் சாக்லேட்டாய் மீண்டும் பளிச்சென புன்னகைக்கிறார் ராதா.

‘‘ஆர்டர் எடுப்பதற்கும், சாக்லேட்களை பேக் செய்து அனுப்புவதற்கும் என்று என்னிடம் 6 பெண்கள் வேலை செய்கிறார்கள். வருமானம் என்பதைத்தாண்டி இத்தனை பேருக்கு என்னால் வேலை வாய்ப்பைத் தரமுடிகிறது என்பதே திருப்திதான்’’ என்கிறவர், ‘‘பொழுதுபோக்காய் ஆரம்பித்த விஷயம், இன்று எனக்கான தொழிலாய் மாறி, வருமானத்தை கொடுக்க ஆரம்பித்து, அதில் வேலை வாய்ப்பையும் சில கொடுக்க முடிகிறது என்றால் அதுதானே வெற்றி’’ என விரல் உயர்த்துகிறார்.

‘‘என் பாஷனை பிஸினசாக மாற்றினேன் என்பதைத் தாண்டி, இங்கு எல்லாமே கிரியேட்டிவிட்டிதான். கொஞ்சம் மாற்றி யோசித்தால் இருந்த இடத்திலே ஜெயிக்கலாம்…’’ மீண்டும் நம்பிக்கையான வார்த்தைகளை உதிர்த்து விடைபெற்றார் சாக்லேட் ராணியான சிவகாசி ராதா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post தின… தின… தின… தீபாவளி! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Kumkum Doshi ,Japan ,Dinakaran ,
× RELATED விரும்பும் முறையில் வீட்டுச் சாப்பாடு!