×
Saravana Stores

அட்யா… பட்யா!

நன்றி குங்குமம் தோழி

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘அட்யா பட்யா’ விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு ஆண்கள் அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதில் கலந்து கொண்ட பெண்கள் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தன் வசமாக்கிக் கொண்டுள்ளது. தொடர்ந்து இந்த விளையாட்டுப் போட்டியில் நம் தமிழ்நாடு அணி பதக்கங்களை வென்று குவித்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அட்யா பட்யா சங்கத்தின் தலைவர் பாலாஜியிடம் பேசிய போது…

‘‘நான் சென்னைவாசி. என்னுடைய சின்ன வயசில் இருந்தே அட்யா பட்யா விளையாட்டு மேல் எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால் அந்த விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் பதக்கங்களும் வென்றேன். அதன் பிறகு பயிற்சியாளராக இருந்தேன். தற்போது தமிழ்நாடு அட்யா பட்யா சங்கத்தின் தலைவராக இருக்கிறேன்.

இந்த விளையாட்டு நம்முடைய பழங்கால விளையாட்டு என சொல்லலாம். தென் மாவட்டத்து கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இந்த விளையாட்டினை கண்டிப்பாக அவர்களின் இளம்
வயதில் விளையாடி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அட்யா பட்யா என்றால் தெரியாது. காரணம், கிளித்தட்டு, உப்பாட்டம், தண்ணி கோடு என்று இந்த விளையாட்டை பல பெயர் கொண்டு அழைப்பார்கள். 1982ல் நாக்பூரில் இந்த விளையாட்டுக்கு அங்கீகாரம் கொடுத்து அட்யா பட்யா என்று பெயர் வைத்தார்கள். இது கபடி மற்றும் கோகோ இரண்டு விளையாட்டின் கலப்படம். மொத்த ஆட்டமே 7 நிமிடம்தான் நடக்கும். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவாங்க. கட்டம் கட்டமாக போடப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்திற்குள் ஒரு அணியில் ஒரு நபரும். அதற்கு அருகே இருக்கும் கட்டத்திற்குள் மற்றொரு அணியில் உள்ள ஒருவர் இருப்பார். கோகோ, கபடி போல ஒரு அணியில் இருப்பவர் மற்ற அணியில் உள்ளவரை தொட்டுவிட்டால், அவர் வெளியேற வேண்டும். ஒரு நபரிடம் சிக்காமல் லாவகமாக தப்பித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அவர்களை கடக்க விடாமல் எதிரணியினர் தடுக்க வேண்டும். இப்படி கடந்து செல்லும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு புள்ளி வழங்கப்படும்.

இதில் அதிகமாக புள்ளிகள் பெறும் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். மற்ற விளையாட்டுகளை போல இந்த விளையாட்டை விளையாட எந்தப் பொருட்களும் வாங்க வேண்டியதில்லை. உடற்தகுதியும் சூழ்நிலைகளுக்கேற்ப உடனே முடிவெடுக்கும் திறனும் இருந்தாலே இந்த விளையாட்டில் ஜொலிக்கலாம். இந்த விளையாட்டில் அதிக முறை தங்கப்பதக்கங்கள் வென்றிருக்கிறோம்’’ என்றவர் அட்யா பட்யா விளையாட்டுப் போட்டிகளில் வென்றது குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விளையாட்டை அங்கீகரித்துள்ளன. தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இதனை விளையாடுகிறார்கள். அதில் அதிகமாக பெண்கள்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் கடந்த 8 வருடமாக இந்திய அணி தங்கப்பதக்கம் பெற்று வருகிறது. கடந்த வருடம் முதல் ஆசிய அளவில் இந்தப் போட்டிகள் இடம் பெற துவங்கியுள்ளன.

இந்த வருடம் பூடானில் நடந்த விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என 4 பேர் தேர்வாகி விளையாடினார்கள். இந்திய அணியில் பங்குபெற்றாலும் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தேனி, திருவள்ளூர் மாவட்டங்கள் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளை நவம்பர் மாதத்தில் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறோம். அதில் 17 மாநிலங்கள் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அணியை பொறுத்தவரை ஆண், பெண் என இரு அணிகளும் கலந்து கொள்ளும் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். முதன் முதலில் 2011ல் வெண்கலப் பதக்கம் வென்றோம். அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் சண்டிகரில் வெள்ளி யும், மேலும் பல போட்டிகளில் வெள்ளி, வெண்கலங்களை வென்று தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தற்போது புதுச்சேரியில் அட்யா பட்யா சங்கம் மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பாக பெண்களுக்கான சப் ஜூனியர் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா என மொத்தம் 17 மாநிலங்கள் இதில் விளையாடியது. தமிழ்நாட்டின் ஆண்கள் அணி அனைத்து லீக் போட்டி
களிலும் வெற்றி பெற்று காலிறுதியில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து அரையிறுதியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் புதுச்சேரியுடன் மோதியது. அதில் 2-0 செட் கணக்கில் தமிழக ஆண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அட்யா பட்யா வீரர்கள் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. ஆண்களைத் தொடர்ந்து பெண்கள் அணியும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று, கால் இறுதியில் ஆந்திராவை தோற்கடித்தது. அரையிறுதியில் புதுச்சேரியுடன் மோதி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

பொதுவாக விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். மத்திய அரசு தபால் துறையில் அட்யா பட்யா வீரர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனத்தில் 3% விளையாட்டு இடஒதுக்கீட்டில் அட்யா பட்யா விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம்’’ என்கிறார் பாலாஜி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post அட்யா… பட்யா! appeared first on Dinakaran.

Tags : Adya ,Padya ,Tamil Nadu ,Adya Patya' Games ,Puducherry ,... Patya ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்...