×
Saravana Stores

இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (12-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

09.11.2024 அன்று, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12.11.2024 அன்று, நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM-8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chief Minister MLA K. Stalin ,Chennai ,Rameshwarat ,Sri Lankan Navy ,Nagapattina ,Chief Minister ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!