×

தேனி பழைய பஸ்நிலையத்தில் மினி பஸ், ஆட்டோ ஸ்டாண்ட் கொண்டு வரப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி : தேனி நகர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டினை அகற்றி, மினி பஸ்கள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டு கொண்டுவரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கேரள மாநில எல்லை மாவட்டமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதியின் காரணமாக தேனியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த 1997ம் ஆண்டு துவக்கப்பட்டது. தேனி நகரானது மாவட்ட தலைநகராக உருவானது முதலாக கடந்த 27 ஆண்டுகளில் தேனி நகரானது நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

தேனி நகரானது மாவட்ட தலைநகரானதையடுத்து, தேனியில் கடந்த 27 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகள், கலைஅறிவியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரி,சட்டக்கல்லூரி, பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளிகள், பாலிடெக்னிக்கல்லூரி, ஐடிஐக்கள் என கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல வணிகத்துறையை பொருத்தவரை தேனியில் பிரமாண்டமான கார்பரேட் வர்த்தக நிறுவனங்களும் போட்டிபோட்டு தேனியை மையம் கொண்டுள்ளன. இதனால் ஜவுளி, நகைக்கடைகள், காலணிகடைகள், பர்னிச்சர் கடைகள் என பல்வேறு கடைகளும், பல்நோக்கு சிகிச்சைக்கான மருத்துவமனைகளும் தேனியில் அமைந்துள்ளன.

மாவட்ட தலைநகராக தேனி உருவானதையடுத்து, தேனியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலகங்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் என அரசுத் துறையிலும் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன்காரணமாக தேனிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அரசுத்துறை பணிக்காகவும், தேனியில் உள்ள வர்த்தக மையங்களில் பணிபுரியவும் என தேனிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதன்காரணமாக தேனியில் கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், அரசுப்பணி, தனியார் வணிக நிறுவனம், பள்ளிக்கல்லூரிகள் என கல்விநிலையங்களக்கு வந்து செல்வோர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் தேனிக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தேனியில் பிரதான சாலைகளாக உள்ள மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலைகள் சந்திக்கும் பகுதியில் காமராஜர் பஸ்நிலையம் செயல்பட்டு வந்தது. நகரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பஸ்நிலையத்திற்குள் வந்து செல்லும் பஸ்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு முதல் தேனியில் தேனி-பெரியகுளம் பை-பாஸ் சாலையில் உள்ள ரிசர்வ் பாரஸ்டுக்கு சொந்தமான 7.33 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்ட பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு அங்கு தற்போது புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தேனியில் புதிய பஸ்நிலையம் செயல்படத் தொடங்கியதையடுத்து, தேனி நகர் பழைய பஸ்நிலையமானது காமராஜர் பஸ்முனையமாக செயல்பட்டு வருகிறது. இதில் புதிய பஸ்நிலையம் செயல்படத் தொடங்கிய பிறகு, பழைய பஸ்நிலையத்தில் முன்பு செயல்பட்ட கம்பம்,போடி, கூடலூர், குமுளி மற்றும் டவுன்பஸ்கள் வழித்தடமாக இருந்த பகுதியில் டூவீலர் ஸ்டாண்டு கொண்டுவரப்பட்டு தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இதனையடுத்து, பழைய பஸ்நிலையத்தில் தெற்கு புறமுள்ள பெரும்பான்மையான பகுதி டூவீலர் ஸ்டாண்டாக மாற்றப்பட்டதால் மீதமுள்ள பகுதியில் மட்டும் தேனி புதிய ஸ்நிலையத்தில் இருந்து தேனி பழைய பஸ்நிலையம் வழியாக கம்பம், போடி மார்க்கமாக வந்து செல்லும் அனைத்து பேருந்துகளும், டவுன்பஸ்களும் மிகவும் நெருக்கடியான பாதையில் வந்து செல்கிறது.

இந்நிலையில் தேனி பழைய பஸ்நிலையத்தில் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த டூவீலர் ஸ்டாண்டிற்கான உரிம காலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன் முடிந்தது. இதனையடுத்து, இப்பழைய பஸ்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த டூவீலர் ஸ்டாண்டிற்கான உரிமத்தை வேறு நபருக்கு ஒப்பந்தம் விடாமல் அந்த டூவீலர் ஸ்டாண்டினை அகற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், டூவீலர் ஸ்டாண்டு உள்ள பகுதியில் தேனி நகர் பெரியகுளம் சாலையில் நேரு சிலை அருகே நிறுத்தப்படும் மினி பஸ்களை தற்போது செயல்படும் டூவீலர் ஸ்டாண்டு பகுதியில் நிறுத்தும் வகையில் மினிபஸ் ஸ்டாண்டு கொண்டுவரப்படும் எனவும், தேனி பழைய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள ஆட்டோக்களுக்கான ஸ்டாண்டினையும் பழைய பஸ்நிலையத்திற்குள் கொண்டு வருதன் மூலம் தேனி பழைய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள நெருக்கடியை தவிர்க்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தேனி நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, ‘‘தேனி பழைய பஸ்நிலையத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டிற்கான ஒப்பந்த காலம் முடிந்துள்ளநிலையில், டூவீலர் ஸ்டாண்டினை காலி செய்து கொள்ள டூவீலர் ஸ்டாண்டு ஒப்பந்ததாரரின் கோரிக்கைப்படி காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் டூவீலர் ஸ்டாண்டு அகற்றப்பட்டதும், நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, விரைவில் மினி பஸ்ஸ்டாண்டும், ஆட்டோ ஸ்டாண்டும் கொண்டுவரப்படும்’’என்றார்.

டூவீலர் ஸ்டாண்டு அகற்றி, மினி பஸ் ஸ்டாண்டு கொண்டுவரப்படும் நிலையில், இப்பகுதியில் தற்போது வரைமுறையில்லாமல் நகராட்சியில் முறைப்படி டெண்டர் மூலமாகவோ, தரை வாடகைக்கான டெண்டர் மூலமாகவோ இல்லாமல் சுமார் 27 பூக்கடைகள் செயல்பட்டு வருகிறது. டெண்டர் விடப்படாத நிலையில் தேனி நகராட்சிக்கு பூ மார்க்கெட்டின் மூலம் வரவேண்டிய ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே வரைமுறையில்லாமல் செயல்பட்டு வரும் பூக்கடைகளையும் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி பூக்கடைக்காரர்களுக்காக தனியாக கடைகளை ஏற்படுத்தி பூ மார்க்கெட்டுக்கான வெளிப்படையான டெண்டர் வைத்து, பூ மார்க்கெட்டையும் வரைமுறைப்படுத்தி தற்காலிக கடைகளை மினி பஸ்ஸ்டாண்டிற்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

The post தேனி பழைய பஸ்நிலையத்தில் மினி பஸ், ஆட்டோ ஸ்டாண்ட் கொண்டு வரப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Nagar ,Kerala State ,Western Ghats ,Dinakaran ,
× RELATED தேனி நகரில் காலியிடத்தில் குப்பையில்...