×

காப்புக்காடில் நான்குவழிச் சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

*வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

புதுக்கடை : குமரியில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிக்காக மாவட்டம் முழுவதும் 20 வருவாய் கிராமங்களில் உள்ள மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தை வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகையை ஒரே மாதிரி வழங்காமல் 8 வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக தொகையும் மீதமுள்ள 12 வருவாய் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிலத்திற்கான விற்பனை தொகையை விட குறைவாகவும் வழங்கி வந்துள்ளனர்.

குறிப்பாக மெதுகும்மல் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ.4 லட்ச வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குன்னத்தூர் கிராமத்தில் உட்பட்ட பகுதியில் ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.15 ஆயிரம் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தை வழங்கிய விளாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சாலைப்பணியை தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் இந்த பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை பணி கிடப்பில் போடப்பட்டு இருந்ததோடு சாலைக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னதாக நேற்று சாலை பணியை அதிகாரிகள் தொடங்க இருப்பதாக மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் தலைமையில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, விஜய் வசந் எம்.பி ஆகியோர் கூட்டம் போட்டு 11ம் தேதி தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நிலம் ஆர்ஜிதம் செய்வதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர். அதிகாரிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் திட்டத்தை கைவிட்டு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அவர்களை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் நீதிமன்ற தீர்ப்பு என்ன வருகிறதோ அதன்பிறகு வேலையை தொடங்கினால் போதும். நீதிமன்ற தீர்ப்புக்கு தாங்கள் கட்டுபடுவதாகவும் கூறினர்.

இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காப்புக்காடில் நான்குவழிச் சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Bavakad ,Pudukadai ,Kumari ,Bavakkad ,Dinakaran ,
× RELATED கூலித்தொழிலாளி மனைவி மாயம்