லண்டன்: வரும் 2034ல் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் உரிமையை சவுதி அரேபியாவுக்கு தரக்கூடாது என, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை திட்டவட்டமாக கூறியுள்ளது. கால் பந்து போட்டியில் அசைக்க முடியாத சக்தியாக சவுதி அரேபியா உருவெடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பல கால்பந்து போட்டிகளை அந்த நாடு நடத்துகிறது. அந்த நாட்டின் சவுதி புரோ லீக் கால்பந்து அணியில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட உலகப் புகழ் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். வரும் 2034ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த உரிமை கோரியுள்ள ஒரே நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது. எனவே, அந்த நாட்டிற்கே போட்டி நடத்தும் உரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சவுதியின் கனவில் மண் அள்ளிப் போடும் விதமாக, மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆம்னஸ்டி சர்வதேச அமைப்பு, விளையாட்டு மற்றும் உரிமைகள் கூட்டமைப்பு (எஸ்ஆர்ஏ), ஆகியவற்றின் அறிக்கை அமைந்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2034ல் உலக கால்பந்து போட்டி நடத்தும் உரிமையை சவுதி அரேபியாவுக்கு தரக் கூடாது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) விதித்துள்ள மனித உரிமை தரக் கட்டுப்பாடுகளை எப்படி நிறைவேற்றும் என சவுதி அரேபியா தெரிவிக்கவில்லை. போட்டி நடத்துவதற்கான சவுதி அரேபியாவின் கோரிக்கை மனுவில், மனித உரிமை அமைப்புகளை அர்த்தமுள்ள வகையில் கலந்து ஆலோசித்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. சவுதி அரேபியாவுக்கு உரிமை அளித்தால், பெரியளவில் மனித உரிமை மீறல் ஆபத்துகள் எழும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 2034ல் உலக கோப்பை கால்பந்து: சவுதி அரேபியா நடத்த முட்டுக்கட்டைபோடும் சர்வதேச அமைப்புகள்; மனித உரிமை மீறல் விஸ்வரூபம் எடுக்கும் appeared first on Dinakaran.