வாலாஜாபாத்: அய்யம்பேட்டை அருகே பைக் மீது வேன் மோதியதில் தனியார் தொழிற்சாலை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (47). மனைவி மற்றும் மகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இவர் தனது பைக்கில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். அதன்படி, நேற்று காலை தொழிற்சாலை பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காஞ்சிபுரம் சாலையில், அய்யம்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மினி பேருந்து திடீரென நின்றது.
இதனால், ரவி திடீரென பிரேக் பிடித்து பைக்கை நிறுத்தினார். அப்போது பின் தொடர்ந்து வந்த மினிலோடு வேன் பைக் மீது அதி வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய ரவி, கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அய்யம்பேட்டை அருகே வேன் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.