களக்காடு அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்பு

*நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக புகார்

களக்காடு : களக்காடு அரசு மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக புகார் தெரிவிக்கின்றனர்.
களக்காட்டில் இருந்து நாங்குநேரி செல்லும் ரோட்டில் பெல்ஜியம் என்ற இடத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில், களக்காடு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பிரிடா மோனியோ என்பவரால் தொடங்கப்பட்டது ஆகும்.

அதன் பின் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மருத்துவமனை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் மருத்துவமனையை தொடங்கிய பிரிடா மோனியோ பெயராலேயே பிரிடா மோனியோ அரசு மருத்துவமனை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 20க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி உள்நோயாளிகள் அறை உள்ளது. களக்காடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ தேவைகளுக்கு இந்த மருத்துவமனையை தான் நம்பி உள்ளனர். தினசரி 250க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு தனி, தனியாக குடியிருப்புகளும் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் களக்காடு அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டம் மற்றும் திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டி.வி.எஸ்), சார்பில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதி, மருத்துவ அறை, வெளி நோயாளிகள் காத்திருப்பு அறையில் தளம் பதித்தல், சமையல் அறை செல்லும் வழியில் தளம் அமைத்தல் மருத்துவமனை கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளிகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளி நோயாளிகள் பயன் பாட்டிற்காக புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் அதிநவீன பாம்பு கடி சிகிச்சை மையமும் புது பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் போதிய பணியாளர்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால் சிகிச்சை பெறவும், பரிசோதனைகள் மேற்கொள்ளவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த அரசு மருத்துவமனையில் இரு டாக்டர்கள், 5 செவிலியர்கள், 2 தற்காலிக செவிலியர்கள், 2 மருந்தாளுனர்கள், 1 அலுவலக ஊழியர் என மொத்தம் 11 பேர் மட்டுமே பணி புரிந்து வருவதாக தெரிகிறது.

நாள் தோறும் இங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதிய பணியாளர்கள் இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே களக்காடு அரசு மருத்துவமனைக்கு 5 டாக்டர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்றும், கூடுதல் செவிலியர்கள் மற்றும் போதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், புதிதாக நவீன ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post களக்காடு அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: