நாகர்கோவில் : நாகர்கோவில் வடசேரி அருணாங்குளம் சந்திப்பு பகுதியில் சாலை திறந்த நிலையில் கிடப்பது பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் இருக்கும் வகையில், மழை நீர் வடிகால்கள் அடைப்புகள், ஆக்ரமிப்புகள் மேயர் மகேஷ் உத்தரவின் பேரில் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ஆறாட்டு ரோடு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக வடசேரி அருணாங்குளம் சந்திப்பு பகுதியில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.
பள்ளிவிளை பகுதியில் இருந்து வரும் தண்ணீர் நேராக பழையாற்றுக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டத்துக்காக வடசேரி சிபிஎச் மருத்துவமனை சாலையில் அருணாங்குளம் சந்திப்பு பகுதியில் சாலையை தோண்டி குழாய் பதித்தனர். அப்போது ஏற்கனவே இருந்த மழை நீர் வடிகால் குறுக்கே குழாய் பதித்தனர். ராட்சத குழாய் பதித்ததால், சாலைக்கு அடியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதுடன், கால்வாய் இடிந்தும், கற்கள் விழுந்து தண்ணீர் செல்ல முடிய வில்லை.
இதனால் அருணாங்குளம் சந்திப்பில் தண்ணீர் பெருக்கெடுத்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால், உடனடியாக மழையிலும் சாலை தோண்டப்பட்டு கால்வாயில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. இதனால் வெள்ள நீர் வேகமாக வெளியேறியது. ஆனால் சாலை தோண்டப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னும் மூடப்படவில்லை. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேன்கள், ஆட்டோக்கள் அதிகளவில் செல்கின்றன.
பைக்குகள், சைக்கிள்களிலும் மாணவ, மாணவிகள் செல்கிறார்கள். அந்த பகுதியில் திருமண மண்டபங்கள், இரு தனியார் மருத்துவமனைகள், ஆட்டோ நிறுத்தங்கள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. மாலை நேரங்களில் அந்த பகுதியில் சாலை ஓரத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்பவர்களும் தற்காலிக கடை அமைத்து உள்ளனர்.
4 சாலைகள் சந்திப்பு என்பதால், பெரும் நெருக்கடியாக உள்ளது. மழை நீர் செல்லும் வகையில் உடனடியாக சாலையை தோண்டி வடிகால் அடைப்பு நீக்கியது பாராட்டுக்குரியது என்றாலும், தோண்டப்பட்ட சாலை 20 நாட்களுக்கு மேல் ஆகியும் திறந்த நிலையில் கிடப்பது பொதுமக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே மாநகராட்சி மேயர் மகேஷ் உடனடியாக, இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post நாகர்கோவில் சி.பி.எச் ரோட்டில் தோண்டிய சாலையை மூடாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.