×

மீதமான உணவை மாற்றும் கலை!

நன்றி குங்குமம் தோழி

வீட்டில் சமைத்த உணவு சில சமயம் மீதமாகி விடும். இன்றைய காலகட்டத்தில் விற்கிற விலைவாசியில் செலவழித்துச் செய்த உணவை குப்பையில் கொட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. அப்படி மீதமான உணவினை உருமாற்றம் செய்து உபயோகப்படுத்தி விடலாம்.

* மதியம் செய்த பொரியல் மீதமாகி விட்டால், அத்துடன் பொடிப்பொடியாக வெங்காயம், தக்காளியை நறுக்கி சேர்த்து உருமாற்றம் செய்து, இரவு டிஃபனுக்கு சைடு டிஷ் செய்துவிடலாம்.

* காலையில் செய்த குழம்பு மீதமாகி விட்டால், அதில் உள்ள நீரை வடிகட்டி காய்கறிகளை மட்டும் எடுத்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, கரம் மசாலாப் பொடி போட்டு வதக்கி சப்பாத்தி, தோசை போன்ற டிஃபன் வகைகளுக்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடலாம்.

* சில சமயம் ரசம் மீதமாகி விடும். அந்த சமயம் அதிலுள்ள கறிவேப்பிலையை எடுத்துவிட்டு, அதிலிருக்கும் பருப்பு, தக்காளியை நன்கு கடைந்து சப்பாத்திக்குப் பிசையும் மாவுடன் கலந்து, தேவையானால் சிறிதளவு மசாலா சேர்த்து சப்பாத்தி செய்தால் அனைவரும் பாராட்டும் மசாலா சப்பாத்தி ஆகிவிடும்.

* இட்லி மாவு என்னதான் ஃபிரிட்ஜில் வைத்தாலும் ஒன்றிரண்டு நாட்கள்தான் புளிப்பு இல்லாமல் இருக்கும். பிறகு புளித்து விடும். மாவில் தேவையான அளவு பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஊத்தப்பமாக செய்தால் குடும்பத்தினர் அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். இப்படி செய்த பின்னரும் மாவு மீதமிருந்தால், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து ஊறவைத்து மிக்ஸியல் போட்டு அரைத்து கலந்து இட்லியாக செய்தால் புதுச் சுவையுடன் இட்லி தயார்.

* குடும்பத்தினர் அனைவரும் விருப்பத்துடன் நூடுல்ஸ் செய்யச் சொல்கிறார்களே என்று செய்வோம். அது மீதமாகி விட வாய்ப்புண்டு. அதோடு சீஸ் துருவி சேர்த்து உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்து கலந்து மைதா மாவு பேஸ்ட் போல தயார் செய்து, அதில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டி கட்லெட் போல செய்து பொரித்தெடுத்தால் சுவையான கட்லெட் தயார்.
இது போன்று ஒவ்வொரு மீந்து போன உணவுப் பண்டங்களையும் உருமாற்றி புது வடிவம் கொடுத்து ருசியான உணவாக மாற்றிவிடலாம்.

தொகுப்பு: எஸ்.பவானி, திண்டுக்கல்.

The post மீதமான உணவை மாற்றும் கலை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சரும பராமரிப்பில் சீரத்தின் பங்கு!