உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர், உள்துறை அமைச்சர், ஒன்றிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா 6 மாதங்கள் பொறுப்பில் இருப்பார். அடுத்த ஆண்டு மே 13ம் தேதி வரை பதவியில் இருப்பார். 1960ஆம் ஆண்டு பிறந்த சஞ்சீவ் கன்னா 1983இல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். அவருடைய பதவிக்காலம் குறைவாக இருந்தாலும், சஞ்சீவ் கன்னாவின் திறன், நீதித்துறை மீதான அவருடைய கொள்கைகள் மற்றும் இந்திய சட்ட அமைப்பின் உள்ளார்ந்த கட்டுப்பாடுகள் குறித்து அதிக ஆர்வம் எழுந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், நீதிபதி கன்னாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அப்போது அவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கொலீஜியத்தின் பரிந்துரைக்கு, அவரை விட பணியில் மூத்த 32 நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன்னுடைய சுயசரிதையில், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்குள் குறைந்தது ஆறுமாத காலம் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவி வகிக்கலாம் என்பதால், அவரை கொலீஜியம் பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு நீதிபதி கன்னா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2006-ல் அவர் நிரந்தர நீதிபதியாக ஆனார். சுமார் 23 ஆண்டுகளாக அவர் வழக்கறிஞராக இருந்தார். முதலில் டெல்லியின் டிஸ் ஹஸாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பணிபுரிந்தார்.

பின்னர் வரி, நடுவர் மன்றம், நிறுவனங்கள் சட்டம், நிலம் கையகப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞராக இருந்தார். வருமான வரித்துறை மற்றும் டெல்லி அரசின் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார். அதன்பின், உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்.

The post உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: