தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிர்ஸ்டன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆலோசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், சில மாதங்களில் அவர் அந்தப் பொறுப்பை கைவிட்டார்.
கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிய பிறகு, அவர் ஐபிஎல் அணியில் சேரக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகின. மேலும் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவார் எனவும் அதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார். நெஹ்ராவுடன் விளையாடிய பார்த்தீவ் படேல், பயிற்சியாளர் பொறுப்புகளை ஒன்றாகக் கையாள்வார்.
இந்திய அணியில் 25 டெஸ்ட், 38 ஒரு நாள் மற்றும் 2 டி20 சர்வதேசப் போட்டிகளில் பார்த்தீவ் படேல் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவராவார்.
The post குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம் appeared first on Dinakaran.