அம்ரித் பாரத் திட்டத்தில் ₹25 கோடியில் தொடங்கப்பட்ட கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறுத்தம்

சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தில் ₹25 கோடியில் தொடங்கப்பட்ட கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காததால் பணிகள் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கும்மிடிப்பூண்டி ரயில்நிலையம் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும்.

இந்த ரயில் நிலையத்தை கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆத்துப்பாக்கம், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபூத்தூர், ஐய்யர் கண்டிகை, கெட்டனமல்லி, பூவலம்பேடு, பூவலை, செதில்பாக்கம், சுண்ணாம்பு குளம் உள்ளிட்ட 81 கிராம மக்கள் மட்டுமல்லாது, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு வந்து போகும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கியமான ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தென்னக ரயில்வேயால் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹25 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே கட்டுமான பொறியாளர் வித்யா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி ரயில்நிலையத்தில் உள்ள 4 நடைமேடைகளை இணைக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் நடைபாலம், எஸ்கலேட்டர், பார்க்கிங் வசதி, சாலை, கழிப்பறை, புக்கிங் சென்டர், தானியங்கி டிக்கெட் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும் ரயில் நிலையம் முழுவதும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவும், பயணிகள் ஓய்வறை, உணவு விடுதி, எலக்ட்ரானிக் திரை, புதிய முன்பதிவு அலுவலக கட்டிடம் போன்றவை வரைபடத்தில் காண்பிக்கப்பட்டது. ஆனால் தொடங்கி சில மாதங்களான நிலையில் பணிகள் முழுமை பெறவில்லை. நடைமேடைகள் பணிகள், டிக்கெட் கவுன்ட்டர் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதர பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக ரயில்வே துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அம்ரித் பாரத் திட்டத்தில் முறையாக ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காததுதான் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதற்கு காரணம். பணியாளர்களுக்கு மாத சம்பளம் மற்றும் தினக்கூலி வழங்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் திணறி வருகின்றனர் என்றார். இந்த பணியை தென்னக ரயில்வே உடனடியாக கருத்தில் கொண்டு மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க கோரி கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அம்ரித் பாரத் திட்டத்தில் ₹25 கோடியில் தொடங்கப்பட்ட கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: