×

காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் பெரியார் நகர் ஏரி புனரமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

 

கூடுவாஞ்சேரி: காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் நகர் ஏரியை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட, ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அண்ணாநகர், விநாயகபுரம், கோகுலம் காலனி, மயிலிமா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதனை, சீரமைத்து தரக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு-குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன்,

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஏ.வி.எம்.இளங்கோவன் மற்றும் காரணைப்புதுச்சேரியில் உள்ள தனியார் சாக்லேட் கம்பெனியான பர்பெட்டிமேலா நிறுவனத்திடம் காரணைப்புதுச்சேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் நளினிஜெகன் கோரிக்கை மனு கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதன்பேரில், சிஎஸ்ஆர் நிதியுதவியின் கீழ் பர்பெட்டிமேலா நிறுவனம் பல கோடி நிதியை ஒதுக்கியது. இதில், பெரியார் நகர் ஏரிக்கரையை சுற்றி சாலை, நடைபாதை, சுற்றுச்சுவர், மரங்கள், பூச்செடிகள் அமைக்கவும், ஏரி நீரை சுத்தப்படுத்தி குடிநீராக மாற்றவும், இதனை பர்பெட்டிமேலா நிறுவனம் தொடர்ந்து பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சீர்கெட்டு கிடக்கும் பெரியார் நகர் பெரிய ஏரியை புதுப்பொலிவுடன் விரைவில் புனரமைக்கவும், அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணைப்புதுச்சேரி திமுக ஊராட்சி மன்ற தலைவரின் தீவிர முயற்சியால், பெரியார் நகர் பெரிய ஏரியை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும் என்ற செய்தியறிந்த அப்பகுதி மக்கள் இது தங்களுக்கு கிடைத்த ஒரு வர பிரசாதமாக கருதுகின்றனர்.

The post காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் பெரியார் நகர் ஏரி புனரமைக்கும் பணி விரைவில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Periyar Nagar Lake ,Karaipuducherry Panchayat ,Karanaipuducherry panchayat ,Karanaipuducherry ,Kattur ,Annanagar ,Vinayakapuram ,Gokulam Colony ,Mayilima ,
× RELATED என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட...