சென்னை: தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் 35வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்திற்கு அக்டோபர், நவம்பர் மாதத்துக்கு வழங்க வேண்டிய காவிரிநீர்ப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் நவம்பர் மாதத்துக்கு வழங்க வேண்டிய 15.79 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும். தற்போது வரை 4 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளதால் எஞ்சிய நீரை வழங்க வேண்டும். அதேபோல் டிசம்பர் மாதத்திற்கு தர வேண்டிய 7.35 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். மேலும் தற்போது 248 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. வெள்ள காலங்களில் அவ்வாறு தண்ணீரை மொத்தமாக திறந்துவிடக் கூடாது. அதிக மழை பெய்தால் வரும் வெள்ள நீரை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது. ஒவ்வொரு மாதமும் வழங்க ேவண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு சார்பில் கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.
அதேபோல் தமிழகத்திற்கு அக்டோபர் மாதத்திற்கு நிர்ணயித்ததைவிட கூடுதல் நீர் தரப்பட்டுள்ளதால் மேலும் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கர்நாடக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்டுக்கொண்ட காவிரி ஆணையம், சில சமயங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும், சில சமயங்களில் தண்ணீர் அதிகமாக இருக்கும், எனவே தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், வெள்ள காலங்களில் நீரை மொத்தமாக திறந்து விடக்கூடாது எனவும், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
The post தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: டெல்லியில் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.