சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கால்நடை மருத்துவர் வி.வலையப்பன் தாக்கல் செய்த மனுவில், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்தார். எனது சிகிச்சை கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதற்கு சிகிச்சை அளித்தேன். சுமார் 10 மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு குரங்கு குட்டி குணமானது. இந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அந்த குரங்கு குட்டியை என்னிடமிருந்து வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டனர்.
குரங்கு குட்டிக்கு அப்போதைக்கப்போது சிகிச்சை அளிக்க வேண்டும். குரங்கு குட்டிக்கு சத்தான உணவு தரப்பட வேண்டும். எனவே, அந்த குரங்கு குட்டி பூரணமாக சுகமடையும் வகையில் எனது கட்டுப்பாட்டில் விடுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிகிச்சை முடியும் முன்பே குரங்கு குட்டியை வனத்துறை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுள்ளது என்றார்.
இதையடுத்து, என்ன காரணத்திற்காக மருத்துவரிடம் இருந்த குரங்கு குட்டியை வனத்துறை கைபற்றியது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, குரங்கு குட்டியின் தற்போதைய நிலை என்ன என்பதை மனுதாரர் வரும் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்து வரும் 24 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த குரங்கு குட்டியை ஆய்வு செய்ய டாக்டருக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.