பகுதி 2
வியாசாய விஷ்ணு ரூபாயராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் போன்றவை யாவும் பூர்ணாவதாரம் ஆகும். பரசுராமர், பலராமர் போன்றவை அம்சாவதாரம். அனுப் பிரவேச அவதாரம் என்பது கிருஷ்ண துவைபாயன என்கிற வியாசருக்குள் சாட்சாத் விஷ்ணுவே பிரவேசம் செய்து, வேதங்களை தொகுக்கிற காரியங்களை செய்ததால் வியாசரும் விஷ்ணுவும் வேறல்ல. வியாசர்தான் விஷ்ணுவாக வருகிறார். விஷ்ணுதான் வியாசராகவும் வருகிறார்.
குரு – சிஷ்ய சம்மந்தம் எங்கிருந்து தொடங்குகிறது?
“வ்யாஸம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரமகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸுகததம் தபோநிதிம்
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாச ரூபாய விஷ்ணவே
நமோ வைப்ரஹ்மநிதயே வசிஷ்டாய நமோ நம:’’
வசிஷ்டரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.
– என்று இந்த விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் வியாசர் யார் என்பதை காண்பித்துக் கொடுக்கிறார்கள்.
கண்ணிநுணு சிறுத்தாம்பில் உள்ள தனியன்
`அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து’’
வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம்
என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்.
இந்த தனியனானது, ட… சடகோபனான ஆச்சார்யனான நம்மாழ்வாரைத் தவிர வேறு எந்த விஷயாந்தரங்களும் அறியாதவர் என்று மதுரகவி ஆழ்வாரை இந்த தனியன் சொல்கிறது. இங்கு விஷயாந்தரங்களை அறியாதவர் எனும்போது வேறு எந்த விஷயங்களும் தெரியாதவர் என்று நினைத்துக் கொள்வோம். மதுரகவியாழ்வார் உலகியல் விஷயம் தவிர, குருவை மட்டும் தெரிந்து கொண்டிருந்தார். இப்படிச் சொன்னால்கூட சாதாரணமாக தொணிக்கிறது. இங்கு விஷயாந்தரம் என்று எதைக் குறிப்பிடுகிறார் எனில், உலகியல் விஷயங்களான லௌகீக விஷயங்களை தெரிந்து கொள்ளாமல், ஆச்சார்யனை மட்டும் தெரிந்து கொண்டார் என்றால், அது சாதாரணமாகி விடும். இங்கு விஷயாந்தரம் என்று எதைச் சொல்கிறார் எனில், பகவானுடைய பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்பதில் அந்தர்யாமித்துவத்தை தவிர மீதி நான்கு நிலைகளும் விஷயாந்தரம். அந்தர்யாமியாக ஆச்சார்யனுக்குள் பகவானுக்குள் வெளிப்படுகிறார் என்ற ஒருநிலையை தெரிந்து கொண்டு, மீதி நான்கையும் அதாவது விஷயாந்தரத்தை தெரிந்து கொள்ளாமல், அந்தர்யாமியாக ஆச்சார்யனிடத்தில் வெளிப்படுகிறார் என்பதால், சடாரியை மட்டும் தெரிந்து கொண்டாலே போதும். ஆச்சார்யனை மட்டும் தெரிந்து கொண்டாலே போதும். மீதி விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என்பதாக வியாக்கியானம் செய்கிறார்கள்.
அந்த வியாக்கியானத்தில் சொல்லும்போது, பாட்டு கேட்குமிடம் பரம், கூப்பிடு கேட்கும் இடம் வியூகம், குதித்த இடம் வியூகம், வளைத்த இடம் அர்ச்சை. இந்த நான்கு இடங்களையும் வகுத்த இடம் அந்தர்யாமித்துவமாக ஆச்சார்யனிடம் இருக்குமிடம் என்று முடிக்கிறார். அப்போது இதில் பாட்டு கேட்குமிடமென்று சொல்லும்போது அங்கு நித்திய சூரிகள் வந்து ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதை பகவான் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அது பரநிலை. அதற்கு அடுத்து கஜேந்திரன் கூப்பிட்ட உடனேயே பாற்கடலிலிருந்து வந்தார் பெருமாள். அது கூப்பிடு நிலை. இது வியூகம்.அடுத்து குதித்த நிலை என்பது அவருடைய மேலான நிலையிலிருந்து நமக்காக குதித்து அவதாரம் எடுக்கிறார். குதித்த இடம் விபவம். வளைத்த இடம் அர்ச்சை. யாரெல்லாம் அவரை அர்ச்சிக்கிறார்களோ, பெருமாளை சாளக்கிராமத்திலோ விதம்விதமான வழிபாட்டுக்கு உட்பட்டு வளைத்துக் கொள்ளும்படியாக இருப்பதால், வளைத்த இடம் அர்ச்சை.ஆனால், இந்த நான்கு இடத்தையும் சொன்னால்கூட ஆச்சார்யன் காட்டவில்லையெனில் இப்படி பரம், வியூகம், விபவம், அர்ச்சை என்னவென்றே தெரியாது. இந்த எல்லா நிலையையும் காட்டக்கூடியவர் யாரெனில் ஆச்சார்யனிடத்தில் அந்தர்யாமியாக இருந்து, சாட்சாத் பகவானே ஆச்சார்யனிடத்தில் இருந்து வகுத்து கொடுக்கிறார். அப்படி வகுத்துக் கொடுத்த நம்மாழ்வார் ஒருவரையே தெரிந்து கொண்டு மற்ற இந்த நான்கையும் விஷயாந்தரம் என்று ஒதுக்கிவிட்டார். பிறகு அந்த ஆச்சார்யானே சாட்சாத் பகவான் என்று மதுரகவியாழ்வாருக்கு ஒரு தனியன் உண்டு. இதுதான் ஆச்சார்யன் பெருமை. குருவின் பெருமை. இப்போது இங்கு இன்னொரு பாசுரத்தில்;
“நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே’’
இந்த பாசுரத்தில் வேதம் சாஸ்திரம் என்று ஒவ்வொன்றாக பார்க்கக் கூடியவர்கள் இழிவாகப் பேசலாம். இவரென்ன ஆச்சார்யானை மட்டுமே சார்ந்திருக்கிறார் என்றுகூட நினைக்கலாம். ஆனால், எனக்கு ஆச்சார்யந்தான் அன்னையாய் அத்தனாய்… அதாவது பெருமாளும் பிராட்டியும் என்ன செய்வார்களோ அதை எனக்கு குருவே செய்வதால் நான் ஏன் தனியாக பெருமாளை பார்க்க வேண்டும். பிராட்டி புருஷகாரம் செய்து பெருமாள் மோட்சம் கொடுக்கிறார். அதை ஆச்சார்யனே தருவதற்கு இருக்கும்போது பிறர் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை என்று ஆச்சார்யனுடைய பிரபாவத்தை இந்த பாசுரத்தில் காண்பிக்கிறார். கபீர்தாசர் சொல்கிறார் குருவும் கோவிந்தனும் வந்து நின்றால் நான் குருவைத்தான் வணங்குவேன். ஏனெனில், குருவை காட்டிக் கொடுத்ததே கோவிந்தன்தான்.கபீர்தாசர் தனது குருவான ராமானந்தரிடம் திருவடி தீட்சை பெறுதல் கபீர்தாசர் வாழ்ந்த காலத்தில் ராமானந்தர் என்ற மகானும் இருந்தார். கபீர்தாசருக்கு ராமானந்தர் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் இருந்தது. அவரிடமிருந்து மந்திர உபதேசமும் ஸ்பரிச தீட்சையும் [சிஷ்யனின் தலையைத் தொட்டு தன் ஆத்ம சக்தியை வழங்குவது] பெற வேண்டும் என விரும்பினார்.
அதே நேரம், தான் மாற்று மதத்தவர் என்பதால், ராமானந்தர் இதை செய்வாரா என்ற சந்தேகமும் இருந்தது. எனவே அவர் தீட்சை பெற ஒரு யுக்தி செய்தார். ராமானந்தர் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கங்கையில் ஸ்நானம் செய்து திரும்புவார். அந்த நேரத்தில் நல்ல இருட்டாக இருக்கும். இதைப் பயன்படுத்தி அவரின் ஸ்பரிசம் தன்மீது படும் வகையில் ஏதாவது செய்ய எண்ணினார். கங்கையிலிருந்து அவர் திரும்பும் வழியில் இருட்டில் படுத்துக்கொண்டார். ராமானந்தர் குளித்துவிட்டு திரும்பினார். வழியில் படுத்திருந்த கபீர்தாசரின் தலைமீது அவரது கால் பட்டுவிட்டது. இருட்டில் யாரையோ மிதித்து விட்டோமோ என பதறிப்போன ராமானந்தர்,‘ராம ராம’ எனச் சொல்லியபடியே விலகினார். ராமானந்தர் உச்சரித்த ராம நாமத்தை தனக்கு உபதேசித்த மந்திர தீட்சையாகவும், அவரது பாதம் தன் சிரசில் பட்டதை திருவடி தீட்சையாகவும் ஏற்றார் கபீர்தாசர். அந்த மந்திரத்தை காலமெல்லாம் உச்சரித்து ஞானம் பெற்றார்.
(அடுத்த இதழில்..)
The post குரு தத்துவம் appeared first on Dinakaran.