தற்காலிக மார்க்கெட்டில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவு; நோய் பரவும் அபாயம்

*சுகாதாரமாக பராமரிக்க கோரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகம் மணிக்கூண்டு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள பழமையான, பழுதடைந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இங்கு செயல்பட்டு வந்த இறைச்சிக்கடைகள், காய்கறி கடைகள் ஏடிசி பகுதியில் உள்ள பார்க்கிங் தளத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு கழிவுநீர் உள்ளிட்டவைகள் செல்ல போதுமான வசதிகள் இல்லாத நிலையில் அண்மையில் பெய்த மழையுடன் சேர்ந்து கழிவுநீரும் அங்கு தேங்கியுள்ளது.

இதற்கிடையே தற்காலிக மார்க்கெட்டில் இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் இறைச்சி கழிவுகள் அங்குள்ள காலியிடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து வெளியேறும் ரத்தம் அங்கு தேங்கியுள்ள கழிவுநீரில் கலந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு புழுக்கள் உற்பத்தியாகி அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்திற்கு மத்தியில் வியாபாரிகள் இருந்து வருகின்றனர். பொருட்கள் வாங்க இங்கு வருபவர்கள் மூக்கை பொத்திய படியே வந்து செல்கின்றனர். மேலும் புழுக்கள் உற்பத்தியால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது.

வியாபாரிகள் கூறுகையில், ‘‘தற்காலிக மார்க்கெட்டில் குப்பைகள், கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. குறிப்பாக இறைச்சி கழிவுகள் அகற்ற வழியில்லாததால், அவற்றை முகப்பு பகுதியிலேயே குவித்து வைக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இங்கு குப்பைகள் தேங்காமலும், மழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதனிடையே தற்காலிக மார்க்கெட் வளாகம் சுகாதாரமின்றி காட்சியளிப்பது குறித்து கடை வியாபாரிகள் ஊட்டி நகராட்சியில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் நகர் நல அலுவலர் சிபி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post தற்காலிக மார்க்கெட்டில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவு; நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: