அரியாங்குப்பத்தில் தெரு நாய்கள் தொல்லை

*வாகன ஓட்டிகள், மாணவர்கள் அச்சம்

தவளக்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். புதுச்சேரி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட ஆர்கே நகர் பிரதான சாலை பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கி, உணவகம், மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளது.

எனவே பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இந்த சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் உட்புறச் சாலை என அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் திடீரென துரத்தி செல்வதும், இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் இருப்பதால் பகலில் பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் சிறுவர்களை கடிப்பது, குப்பைக் கழிவுகளை சாலையில் இழுத்து வந்து போடுவதும் என தினமும் அட்டகாசம் செய்து வருகிறது.

இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் ஊலையிடுவதால் பலர் தூக்கத்தை துளைத்துள்ளனர், மேலும் இரவு-பகல் நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிகின்ற தெருநாய்கள் துரத்தியதில் ஏராளமானோர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து சமீப காலமாக காயமடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

The post அரியாங்குப்பத்தில் தெரு நாய்கள் தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: