ஊட்டி : கூடலூர் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பாரா, பீச்சன்கொல்லி பகுதிகளில் வசிக்கும் பகுதி மக்கள் கைவசம் வைத்துள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேவர்சோலை பேரூராட்சி துணை தலைவர் மற்றும் ஊர் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் கூடலூர் வட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு போஸ்பாரா, பீச்சன்கொல்லி பகுதிகளில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகிறோம். விவசாயம் தான் எங்களது வாழ்வாதாரம். இங்கு மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக காப்பி, குரு மிளகு, தேயிலை, பாக்கு போன்றவற்றை விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே வாழ்ந்து வருகிறோம்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குரோ மோர் புட் திட்டத்தின் மூலம் நிலம்பூர் கோவிலகத்தின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் வாரிசுகள். எங்களுக்கு இந்த நிலமும் வீடும் தவிர வேறு எங்கு எவ்விதமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இல்லை. மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பும் பெற்றுள்ளோம். வீட்டு வரி கட்டணம் மற்றும் இதர வரிகள் செலுத்தி வருகிறோம்.
மேலும், இப்பகுதியில் 1958ம் ஆண்ட முதல் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ தேவாலம் உள்ளது. 140 குடும்பங்கள் இந்த தேவாலயத்தில் இறை வணக்கம் செய்து வருகின்றனர். 1955வது ஆண்டில் துவக்கப்பட்ட செறுமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சேர்ந்து விவசாய கடன் பெற்று விவசாயம் செய்து வந்தனர். 2006ம் ஆண்டு முதல் கூட்டுற வங்கி, பட்டா இல்லை என காரணம் கூறி கடன் வழங்குவதை நிறுத்தி விட்டது. 1969ம் ஆண்டு ஜென்மம் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் கைவச நிலங்களுக்கு பட்டா கிடைக்க தகுதியானவர்கள் என்றாலும், எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. 1978-வது ஆண்டில், வனத்துறையினர் நிலம் வெளியேற்றுதல் நடவடிக்கையை எதிர்த்து லூயிஸ் என்பவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதையடுத்து இந்த துயர சம்பவத்தின் அடிப்படையில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர், இப்பகுதியை நேரடியாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளும் பட்டா பெறுவதற்கான தகுதியானவர்கள் என்றும், அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை இங்கு யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2024 செப்டம்பர் மாதம் 24ம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், உண்மையான கள நிலவரத்தை ஆய்வு செய்யாமலும், விவசாயிகளின் கருத்து கேட்காமலும், 73.5 ஏக்கர் நிலம் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறி, அரசாணையின் நகல் எங்கள் வீட்டு சுவர்களில் வனத்துறை அதிகாரிகளால் ஒட்டப்பட்டது.
இதனால், எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது. 1969ம் ஆண்டு ஜென்மம் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையிலும், 2006 வன உரிமை சட்டத்தின் அடிப்படையிலும் கைவச நிலங்களுக்கும் பட்டா பெற தகுதியானவர்கள் நாங்கள். மேலும், எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக வனமாக மாற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைத்து நாங்கள் வைத்துள்ள கைவச நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
The post கூடலூர் தேவர் சோலை பேரூராட்சி பகுதியில் போஸ்பாரா, பீச்சன்கொல்லியில் வசிப்பவர்கள் நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் appeared first on Dinakaran.