கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார், கவியருவி, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு உள்ளது. இதில், ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும்.
ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 31ம் தேதி முதல் விடுமுறை என்பதால், ஆழியாரில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்தது. கடந்த 4 நாட்களாக ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அவர்கள், அணையின் நீர்தேக்க பகுதியை ரசித்தும், பூங்காவில் பொழுதை கழித்தும் சென்றனர். நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்காவில் செயற்கை நீரூற்று ஏற்படுத்தப்பட்டது. அதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் விதிமீறுவதை தடுக்கவும், கண்காணிப்பு பணிக்காகவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், சுமார் 3 இடங்களில் ஒலிபெருக்கி அமைத்து, அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
ஆழியாருக்கு வந்த பயணிகளின் வாகனங்கள் பூங்கா அருகே உள்ள ரோட்டோரத்தில் வரிசைகட்டி நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் கடந்த 4 நாட்களில் சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோல் ஆழியார் அருகே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சில நாட்கள், வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமானதுடன், அவர்கள் கவியருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். கூட்டம் அதிகரிப்பால், பல சுற்றுலா பயணிகள், அருவி முன்பு குளம்போல் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், சிலர் வால்பாறை மலைப்பாதை ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெகுநாட்களுக்கு பிறகு கவியருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், தடை விதிக்கப்பட்ட நவமலை வனப்பகுதிக்கு விதிமீறி பயணிகள் செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தீபாவளி தொடர் விடுமுறை நாட்களையொட்டி, ஆழியார் மற்றும் கவியருவிக்கு சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.8 லட்சம் வரை கட்டண வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தொடர் விடுமுறை 4 நாட்களில் ஆழியார், கவியருவிக்கு 35,000 பேர் வருகை appeared first on Dinakaran.