ஊட்டி: குன்னூர், கோத்தகிரி பகுதியில் கனமழை கொட்டியதால் மரங்கள் விழுந்தும், சிறு சிறு மண் சரிவு ஏற்பட்டும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 31ம் தேதி நள்ளிரவு முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் குன்னூர் அருகே பேராக்ஸ் பகுதியில் கார் மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
அன்று இரவிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. தீயணைப்புத் துறையினர் ஜேசிபி உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். குன்னூர் அருகே பந்திமை சாலை, சப்ளை டிப்போ உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்கள் விழுந்தன. இவை உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டன.
குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு செல்லும் சாலையில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. குன்னூர் பாரத் நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மண்சரிவில் சிக்கியது. பொக்லைன் உதவியுடன் மண் அகற்றப்பட்டு கார் மீட்கப்பட்டது. குன்னூர் தனியார் பள்ளி அருகே கட்டப்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான 20 அடி உயர தடுப்புச்சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.
அருகில் உள்ள கட்டிடத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. அங்கு சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை செல்லும் சாலையில் மரங்கள் விழுந்ததால் அங்கிருந்து ஊட்டி வரக்கூடிய பஸ்கள் தாமதமடைந்தன. கீழ் கோத்தகிரியில் 143 மிமீ, கோத்தகிரியில் 138 மிமீ, குன்னூரில் 105 மிமீ மழையும் பதிவானது.
* மலை ரயில் சேவை நாளை வரை ரத்து
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் நேற்று காலை வழக்கம்போல 7.10 மணியளவில் 184 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து ஊட்டிக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் கனமழை காரணமாக கல்லாறு-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து சேதமடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை மற்றும் ரயில் பாதை சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வரும் 5ம் தேதி (நாளை) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.
The post குன்னூர், கோத்தகிரியில் கனமழை 10 இடங்களில் மண் சரிவு: சாலைகளில் மரங்கள் விழுந்து பாதிப்பு appeared first on Dinakaran.