×
Saravana Stores

காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் அமித்ஷாவை குற்றம்சாட்டிய கனடாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை: தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது

புதுடெல்லி: காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து கனடா அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது, ஆதாரமற்றது என கூறியுள்ள இந்தியா, இது இரு நாட்டு உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை நேரில் அழைத்து கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். ஆனால் அதற்கான ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை என குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். அதே போல இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரிகளை அந்நாடு திரும்ப பெற்றுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடாவின் வெளியுறவு துறை இணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த 29ம் தேதி குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களிடம் இத்தகவலை தான் உறுதிப்படுத்தியதாக அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு மோரிசன் பேட்டி அளித்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் உத்தரவிட்டிருப்பதாகவும், அது அமித்ஷா என்று உளவுத்தகவல்கள் கூறியிருப்பதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மோரிசனின் பேட்டி அமைந்தது. ஆனால் இதற்கும் கனடா தரப்பில் எந்த ஆதாரமும் தரப்படாமல், வெறுமனே குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் இந்தியா, கனடா உறவில் மேலும் சிக்கலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா கடும் பதிலடி தந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள கனடா துணை தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அளித்த வாராந்திர பேட்டியில், ‘‘கனடா தூதரக பிரதிநிதிக்கு சம்மன் அனுப்பி இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமித்ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது, அடிப்படை ஆதாரமற்றது.

இந்தியாவை இழிவுபடுத்த வேண்டுமென்றும், பிற நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் கனடா அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை சர்வதேச ஊடகங்களிடம் கசிய விடுவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. கனடா அரசின் அரசியல் திட்டங்களுக்காக அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது இந்தியா, கனடா இடையேயான உறவில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’’ என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்போது, கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் உளவுபார்க்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜெய்ஸ்வால், ‘‘ஆம், நமது சில தூதரக அதிகாரிகள் கனடா அரசால் வேவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் ஆடியோ, வீடியோ கண்காணிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இது சர்வதேச தூதரக விதிமுறைகளுக்கு முரணானது. இதுதொடர்பாக இந்திய அரசு தரப்பில் முறைப்படி கனடா அரசிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த அத்துமீறலை எந்த வகையிலும் கனடா நியாயப்படுத்த முடியாது’’ என்றார்.

* இந்திய நிறுவனங்களுக்கு விதித்த தடை நீக்கப்படுமா?
ரஷ்யாவுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 15 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த ஜெய்ஸ்வால், ‘‘சர்வதேச வர்த்தகத்திலும், ஆயுத பரவல் கட்டுப்பாட்டிலும் இந்தியா சட்டப்பூர்வமான, ஒழுங்குமுறை கட்டமைப்புகளை கொண்ட நாடு. எனவே இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கத்தை பெற அமெரிக்காவிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்’’ என்றார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் 1,100 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சமீபத்திலும், குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் இந்தியாவுக்கு தனி விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘மக்கள் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே நல்ல ஒத்துழைப்பு நீடிக்கிறது. எனவே எங்களால் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க முடியும் என நம்புகிறோம்’’ என்றார்.

* இணைய அச்சுறுத்தல் பட்டியலில்இந்தியா
இணைய அச்சுறுத்தல் எதிரிகளின் பட்டியலில் முதன்முறையாக இந்தியாவை இணைத்து கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. கனடா நாட்டின் தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கையில் சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவுக்குப் பிறகு இணைய அச்சுறுத்தல் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

* டெப்சாங்கிலும் ரோந்து பணி
கிழக்கு லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய இரு பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகளை வாபஸ் பெற இருதரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, டெம்சோக்கில் படைகள் திரும்ப பெறப்பட்டு ரோந்து பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் டெப்சாங்கில் நேற்று சரிபார்ப்பு ரோந்து பணி தொடங்கியதாக வெளியுறவு செய்திதொடர்பாளர் ஜெய்ஸ்வால் கூறினார். முன்னதாக எல்லை மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் தீபாவளியையொட்டி இனிப்புகளை பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

The post காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் அமித்ஷாவை குற்றம்சாட்டிய கனடாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை: தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது appeared first on Dinakaran.

Tags : India ,Canada ,Amit Shah ,Khalistan ,New Delhi ,minister ,Union Home Minister ,
× RELATED அமித் ஷா மீது புகார்: கனடாவுக்கு இந்தியா கண்டனம்