×

திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய கலாசார நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது. இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்று கூறினார்.

The post திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravidian movement ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Thiruvananthapuram ,Udhayanidhi Stalin ,Malayalam Manorama ,
× RELATED தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்:...