×

குண்டும் குழியுமாக உள்ளதால் கடும் அவதி: திருப்போரூர் மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை


திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் ஆகிய 3 கிராமங்களில் 5 மயானங்கள் உள்ளன. இந்த மயானங்களை பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. திருப்போரூர் நகர பகுதிக்குரிய மயானம் மார்க்கெட் குளத்தின் வழியாக செல்லும் வழியில் உள்ளது. இந்த சாலை திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது என கூறி கோயில் நிர்வாகம் சார்பில் சாலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மயானத்திற்கு செல்லும் பாதை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. 15 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள், பள்ளங்களுடன் காட்சி அளிப்பதால் சடலத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு புதிய சிமென்ட் சாலை குறிப்பிட்ட பகுதி வரை அமைக்கப்பட்டது.

ஆனால் பிற பகுதிகள் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருவதாலும் இந்த சாலையை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் பயன்படுத்தும் என்பதாலும் அதிலுள்ள நிர்வாக சிக்கல் காரணமாக அனுமதி தர முடியாது என கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக கூறி ஒதுங்கி கொண்டது. இதனால் 15 ஆண்டுகளை கடந்தும் இதுவரை மயானப்பாதை அமைக்க முடியாத நிலையில் பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் சடலங்களை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய மயானப்பாதை அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post குண்டும் குழியுமாக உள்ளதால் கடும் அவதி: திருப்போரூர் மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruporur Mayanath ,Thiruporur ,Tiruporur ,Kalavakkam ,Kannakpattu ,METROPOLITAN ADMINISTRATION ,Mayanam Market ,Tadum Awati ,Mayanath ,
× RELATED கேளம்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து 10 மாடுகள் பலி