×

அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த சிறுமி மர்ம மரணம்: குளியல் அறையில் சடலம் மீட்பு: உரிமையாளரிடம் “கிடுக்கிப்பிடி’’


அண்ணாநகர்: அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஹர்ஷத் என்பவரின் வீட்டில் கடந்த ஒருவருடமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலைகள் செய்துள்ளார். நேற்று மதியம் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி இறந்துகிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைந்தகரை போலீசார் வந்து காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் நேற்று முந்தினமே சிறுமி இறந்துவிட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வீட்டின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். ‘’குளிக்க சென்ற சிறுமி நீண்ட நேரம் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது இறந்து கிடந்தார். போலீசாரிடம் தெரிவித்தால் நான் சிக்கிக்கொள்வேன் என்பதால் தெரிவிக்காமல் பயந்து இருந்தேன்.

எப்படியும் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் மறுநாள் போலீசாருக்கு தெரியப்படுத்தினேன்’ என்றார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் இது சம்பந்தமாக 10 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,’’ அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி காயங்களுடன் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்யவேண்டும்’ என்றனர்.

The post அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த சிறுமி மர்ம மரணம்: குளியல் அறையில் சடலம் மீட்பு: உரிமையாளரிடம் “கிடுக்கிப்பிடி’’ appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Sadashiwa Metha Road, Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறி...