ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை தீபாவளிக்கு நகை வாங்க காத்திருந்தோர் ஏமாற்றம்: ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது

சென்னை: தீபாவளி சமயத்தில் நகை வாங்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே வந்து கொண்டிருக்கிறது. நேற்றும் தங்கம் விலை சரவனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால் அதில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அதுவும் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.

கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த மாதம் 21ம் தேதி ஒரு சவரன் ரூ.58,400க்கும், 23ம் தேதி ஒரு சவரன் ரூ.58,720-க்கும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59 ஆயிரத்திற்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,375-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60,000த்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பண்டிகை, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை தீபாவளிக்கு நகை வாங்க காத்திருந்தோர் ஏமாற்றம்: ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: