சவரன் ரூ. 60 ஆயிரத்தை நெருங்கி தங்கம் விலை புதிய உச்சம்: தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கலக்கம்

சென்னை:தங்கம் விலை இன்றும் அதிரடியாக சவரனுக்கு ரூ. 520 உயர்ந்தது. தீபாவளி நேரத்தில் தொடர் விலையேற்றத்தால் நகை வாங்குவோர் கலக்கடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 23ம் தேதி சவரன் ரூ. 58,720க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது.அதாவது, கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,315க்கும், சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7375க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு, சவானுக்கு ரூ.59,520-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இன்று அதிக அளவில் நகை விற்பனையாக உள்ளது. தீபாவளி அன்றும் சிலர் நகை வாங்குவார்கள்.இந்த நேரத்தில் தங்கம் விலை தினம், தினம் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரம் ரூபாயாக இருக்க, செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி என சேர்த்து ஒரு சவரன் விலையே 64 ஆயிரம் ரூபாயை நெருங்கும் என கூறப்படுகிறது. ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் விலையால், தங்கம் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 109க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ. 1,09,000க்கு விற்கப்பட்டது.

The post சவரன் ரூ. 60 ஆயிரத்தை நெருங்கி தங்கம் விலை புதிய உச்சம்: தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கலக்கம் appeared first on Dinakaran.

Related Stories: