×
Saravana Stores

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தியையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேசியமும், தெய்வீகமும் எனது இருகண்கள் என்று வீர முழக்கமிட்டவர் தேவர் திருமகனார். கம்பீரமாக காட்சியளிப்பவர் முத்துராமலிங்கத்தேவர் என அறிஞர் அண்ணா கூறியுள்ளார். வீரராக பிறந்து, வீரராக வாழ்ந்து மறைந்தவர் தேவர் என கலைஞர் புகழாரம் சூட்டியுள்ளார். தியாகிகளை போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. முத்துராமலிங்கத் தேவரின் புகழுக்கு பெருமைசேர்க்கும் வகையில் பல்வேறு பணிகளை செய்துள்ளோம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பசும்பொன் நினைவிடத்தில் ரூ.1.55 கோடி செலவில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக் கழகத்தில் முத்துராமலிங்கத்தேவர் கல்வி அறக்கட்டளை அமைத்தோம். மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். டெல்லிக்கு செல்லும்போது பிரதமரை சந்தித்து மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக பேசி வருகிறேன்.

தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கடிதங்கள் எழுதியதை அடுத்து மீனவர்களை படிப்படியாக விடுவிக்கின்றனர். வெளியுறவுத்துறையும் அவ்வப்போது முயற்சி எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வந்தாலும் மீனவர் பிரச்சனை தொடர்கிறது. மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட காவிரி- குண்டாறு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chief Minister MLA ,K. Stalin ,Ramanathapuram ,Muthuramalinga Devar Memorial ,Devar Jayanthaioti, Pasumphon ,
× RELATED தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்...