நாளை தீபாவளி கொண்டாட்டம் கடைசிநேர விற்பனை படுஜோர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை

* கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்
* சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் மக்கள் படையெடுப்பு
* இனிப்பு, பட்டாசு விற்பனை களைகட்டியது

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்தனர். இதே போல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களைகட்டியது. இன்றும் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டும் என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று காலை முதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் தீபாவளி விற்பனை நேற்று களைகட்டியது.

சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையின் முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ெபாருட்களை வாங்கி சென்றனர்.

இதனால் நேற்று முழுவதும் தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மாலை 6 மணிக்கு மேல் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று பொருட்களை வாங்கி சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

கூட்ட நெரிசலில் கவனமாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி வாயிலாக போலீசார் அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தனர். அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது.

சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விசேஷ தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அனைத்து ரயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. முன்பதிவில்லா பெட்டியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதேபோல கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில் நிரம்பி வழிந்து வருவதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களும் நேற்று முதல் ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வாங்கவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுவீட் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் இன்று அரைநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வேலை நாளில் வருவதால், முன்னதாக பண்டிகை ஏற்பாடுகளை செய்வது சிரமமாக இருக்கும். அந்த வகையில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் முன்னதாக விடுப்பு அளித்துள்ளதால் அங்கு பணியாற்றும் நபர்கள் முன்னதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்னேற்பாடுகளை செய்து கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், தனியார் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் முன்னதாகவே வெளியூர் செல்ல முடியாமல் போகலாம். அதன் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னதாக ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை வந்தன.அதன்பேரில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 30ம் தேதி வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றாலும், மதியத்துக்கு பிறகு அரைநாள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 30ம் தேதி முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரசு பேருந்துகள் மூலம் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளி பண்டிகைக்காக 14,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 28ம் தேதி 1,43,862 பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொண்டனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று ஒட்டுமொத்தமாக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கலாம் என போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

The post நாளை தீபாவளி கொண்டாட்டம் கடைசிநேர விற்பனை படுஜோர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: