×
Saravana Stores

சிறுகதை-வெற்றுக் காகிதம்!

நன்றி குங்குமம் தோழி

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பழங்கஞ்சியையும், கம்பங்கூழையும் குடிச்சிட்டு இருப்பீங்கப்பா. இப்படித் தனியாக் கிடந்து கஷ்டப்படணும்னு உங்களுக்கென்ன தலையெழுத்தா? பேசாம எங்ககூட பெங்களூருக்கு வந்திடுங்கன்னா அதையும் கேட்கமாட்டேங்கிறீங்க! கஷ்டமா இருக்குப்பா” – வருத்தமாய்க் கூறிய மகனை பொதுவாய் பார்த்துவிட்டு மீண்டும் வெண்கலக்கும் பாலில் இருந்த பழைய சோற்றையும் புளித்துவையலையும் ரசித்து உண்ணத் துவங்கினார் கார்மேகம்.

“அம்மா! நீங்களாவது சொல்லுங்களேம்மா. உங்களை இப்படி தனியா விட்டுட்டு என்னால அங்கே நிம்மதியா இருக்க முடியலம்மா. பேசாம இந்தத் தோட்டம் தொரவையெல்லாம் வித்திட்டு எங்ககூட வந்திடுங்கம்மா” – ஆனந்தன் அன்னையிடம் மன்றாட அருகே நின்ற ரமா இடித்தாள்.“இப்ப எதுக்கு இப்படி பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சிட்டு இருக்கீங்க? இது உங்க சொத்து! தைரியமாய் பேசி கையெழுத்தை வாங்கிட்டு புறப்படுங்க. என்னால இந்த மொட்டைப் பட்டிக்காட்டில எல்லாம் ஒரு நாள் கூட ஸ்டே பண்ணமுடியாது. சட்டுன்னு பேசி முடிங்க” என்று ஆங்கிலத்தில் சிடுசிடுத்தவளை அமைதியாய் இருக்கும்படி ஆனந்தன் சைகை செய்ய, சாப்பிட்டு முடித்து கைகளை கழுவினார் கார்மேகம்.

“மருமகப் பொண்ணு என்னப்பா சொல்றா?”“அது… அது… அவளும் இதையே தாம்ப்பா சொல்றா. பிள்ளைங்க படிப்பு… வேலைன்னு எங்களால அப்பப்ப இங்கே வந்து பார்க்க முடியல. அதான் பேசாம நம்மகூட கூட்டிட்டு போயிடலாம்னு சொல்றா!”“ஓஹோ! மருமகளே! எங்களுக்கு தோட்டம் துரவு விவசாயம்னு நாளு பூரா உழைச்சே பழகிட்டோம். உழைச்சாத்தான் சாப்பாடு இறங்குது. அங்கன வந்து வூட்டுக்குள்ளயே அடைஞ்சிகிடந்தா சாப்பாடு செமிக்காதும்மா. நாங்க இங்கனயே இருந்துக்கிறோம்.”“அதுக்கில்ல மாமா! வயசான காலத்தில் பெத்தவங்கள கவனிக்காம விட்டுட்டோம்னு யாரும் ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதில்ல?”“அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதேம்மா. அந்த பாஷை புரியாத ஊர்ல யார்வந்து உன்கிட்ட இப்படிக் கேட்கப் போறாங்க? மரகதம்! நம்ம புள்ள… ஊர்ப்பக்கம் வந்து பத்து பனிரெண்டு வருஷம் இருக்காது?” என்றார் தன் மனைவியிடம்.

“இருக்குமுங்க!”“ம். குறிஞ்சி பூத்தாமல வந்திருக்கான். கோழியடிச்சி குழம்பு வை. நான் போயி தண்ணியை திருப்பிவிட்டுட்டு வாறேன்” என்று புறப்பட்டவரை அவசரமாய் தடுத்தான் ஆனந்தன்.
“அப்பா! இந்த வேகாத வெயில்ல ஏம்ப்பா இப்படிக் கஷ்டப்படுறீங்க? பேசாம இதை வித்திட்டு வர்ற பணத்தை பேங்க்ல போட்டுட்டு வட்டியை எடுத்து உட்கார்ந்து சாப்பிடலாமில்ல?”
“என்னப்பா சொல்ற?”“ஆமாம்ப்பா! போன வாரம் இசக்கிமுத்து மோட்டார் போட போனப்ப கரண்ட் பிடிச்சி செத்துட்டானாமே? நம்ம மாடசாமி தாத்தாவ கூட வயல்ல பாம்பு கடிச்சதா கேள்விப்பட்டேன். இதையெல்லாம் கேட்டதுல இருந்து மனசு கிடந்து அடிச்சுக்குதுப்பா… அதான் மனசு கேட்காம ஓடிவந்தோம்.

பேசாம எங்க கூட வந்திடுறீங்களா?”“அதான் சொன்னேனேப்பா… அங்கே வந்து வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடந்தா நோயாளியாகிடுவோம். நாங்க நல்ல ஆரோக்கியத்தோடத்தானே இருக்கோம். இப்படி காலாற நடந்து தோட்டக்காட்டுல வேலை செய்து பழகினவங்களால வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்க முடியாதுப்பா. அந்த பாஷை தெரியாத ஊர்ல ஒரு கோவில் குளம்னு கூட எங்களால போக முடியாது. எங்களுக்கு இதுதான் சரி. நீ என்ன சொல்ற மரகதம்?” என்று மனைவியிடம் திரும்பினார்.

“நமக்கு இது போதுங்க. நமக்கு என்ன குறைச்சல் இங்கே?”“ம்! இதான்… இந்த மனசுதான் வேணும். கிடைத்ததை வெச்சு நிறைவாய் வாழுறது தான் வாழ்க்கை. நாங்க நிறைவாய்
சந்தோஷமாய் இருக்கோம்ப்பா. நீ எங்களைப் பத்தி கவலைப்பட வேண்டாம்!”“அதெப்படி மாமா கவலைப்படாம இருக்க முடியும். இங்கே உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா…”
“பதறாதம்மா! எதுவும் ஆகாது. அப்படியே ஏதாவது ஆனாலும் நம்மகிட்ட வேலை செய்யுற புள்ளைங்க பார்த்துக்கும்.”

“வேலைக்காரங்க எப்படிப்பா பார்ப்பாங்க?”
“பார்த்துப்பாங்கய்யா. நல்லா பார்த்துப்பாங்க. ரெண்டு வருஷம் முன்னால விஷக்காய்ச்சல் வந்து படுத்தோமே, அப்ப நீயா வந்து பார்த்த? இது பரவுற நோய்.. நாங்க வந்தால் எங்களுக்கும் பரவிடும் கொரோனா. அது இதுன்னு சொல்லிட்டு அங்கேயே உட்கார்ந்திட்டியே… அப்ப அந்தப் புள்ளைங்க தான் எங்களை பார்த்துக்கிட்டாங்க. கஞ்சி காய்ச்சி தர்றது… மருந்து அவிச்சி தர்றதுன்னு எங்க கூடவே இருந்து பார்த்துக்கிட்டாங்க. அந்தப் புள்ளைங்க உன்னை மாதிரி உசுருக்குப் பயப்படல. பாசத்துக்கு கட்டுப்பட்டு செய்தாங்க.”

“ம்ம்! அவங்க பாசத்தை நானும் கேள்விப்பட்டேன். ஒரு நாலு நாளைக்கு சேவகம் பண்ணினதும் உயிலை அவங்க பேர்ல எழுதி வெச்சிடுவீங்ளா? உங்க இரக்க குணம் தெரிஞ்சு பாசமாய் இருக்கிற மாதிரி நடக்கிறாங்கப்பா! எல்லாமே வேஷம்! இதுகளை நம்பி ஏமாந்திடாதீங்க” என்ற மகனை சற்று நேரம் கூர்ந்து பார்த்தார் கார்மேகம். ஆனந்தன் தடுமாறிப் போனான்.
“எ… என்னப்பா? ஏன் இப்படிப் பார்க்கிறீங்க?”“இல்ல. நீ இந்தப்பக்கம் வந்து வருசக்கணக்காவுது. ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்தான் எங்ககிட்ட பேசுற! பிறகெப்படி இங்க உள்ள நிலவரம் உனக்கு தெரியுது?”“அ… அ…து… சும்மா யார்கிட்டயாவது விசாரிப்பேன்”- ஆனந்தன் சமாளிப்பாய் கூற, கார்மேகம் சிரித்தார்.“யாருகிட்ட? அந்த பொன்னையா மவன்கிட்டயா?”“அப்பா?”

“ஏன்டா… அவனே நமக்கு ஆகாதவன். அவன்கிட்ட போன் பண்ணிப் பேச உனக்கு நேரமிருக்கு. எங்ககிட்ட பேச உனக்கு நேரமில்ல? ம்?”
“நேரமில்லாம இல்லப்பா! எங்களுக்கு ராத்திரி வரைக்கும் வேலை இருக்கும். அதுக்குப் பிறகு போன் பண்ணினா நீங்க தூங்கிடுவீங்கன்னுதான்…”
“அவனுக்கு போன் பண்ணி பேசுற. சரிவிடு! இப்ப என்ன சொல்லி உங்களை வரச் சொன்னான்?”

“சேச்சே! அவன் எதுவும் சொல்லலப்பா! ரெண்டு நாள் லீவு கிடைச்சது. அதான் உங்களைப் பார்த்திட்டுப் போலாம்னு வந்தோம். இப்படி இளைச்சுப் போய் இருக்கீங்களேப்பா. பெத்த புள்ள நான் கல்லு மாதிரி இருந்தும் இத்தனை வயசுக்குப் பிறகும் உங்களை வயல்ல இறங்கி வேலை செய்யவிடலாமா? அதான் எங்ககூட கூப்பிட்டுட்டு போயிடலாம்னு பார்த்தேன். உங்களால அங்கே வந்து தங்கமுடியாதுன்னு தெரியும். படிப்பறிவு கிடையாது. வேற வழியென்னன்னு யோசிச்சோம். இப்ப ரெண்டு பேரும் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்திருக்கோம்.”
“என்ன முடிவு?”“ஒரு நிமிஷம்ப்பா!” என்றவன் தாழ்வாரத்தில் இருந்த பெட்டியைத் திறந்து எதையோ எடுக்க, கார்மேகமும் மரகதமும் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டனர்.

“இந்தாங்கப்பா! இதைப் பிடிங்க” என்று கற்றையாய் ரூபாய் நோட்டுக்களை தந்தை கையில் கொடுக்க அதிர்ந்து போனார் கார்மேகம். அனைத்தும்
இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள்.“ஆனந்தா! என்ன இது? எங்களுக்கு எதுக்கு இம்புட்டு பணம்?”

“அப்பா! இத்தனை வருஷம் நீங்க வெயில்லயும் மழையிலயும் உழைச்சது போதும்பா. அம்மாவும் ரொம்ப தளர்ந்திட்டாங்க. பேசாம இந்தப் பணத்தை வெச்சு நிழல்ல உட்கார்ந்து சாப்பீடுங்கப்பா! இந்த ஊரையும் வீட்டையும் விட்டுட்டு எங்ககூட வரமாட்டீங்க. ஆனா, வீட்டோட இருந்து இனிமேலாவது ரெஸ்ட் எடுங்கப்பா! அப்பதான் நான் அங்கே நிம்மதியா இருக்க முடியும்.”
“அது சரிப்பா! ஆனா தோட்டம்?”“அதை எம்பொறுப்பில விட்டுடுங்கப்பா!”“நீ… விவசாயம் பண்ணப் போறியா?”

“அய்யோ! எனக்கு அதைப்பத்தி என்ன தெரியும். வேற யார்கிட்டயாவது லீசுக்கு விட்டுடலாம். அதை பிறகு பேசலாம். அம்மா சாப்பாடு போடுறியா? பசிக்குதும்மா!”
“சித்த பொறுத்துக்கப்பா! இப்ப சமைச்சிடுறேன்” என்ற மரகதம் சமையல்கட்டை நோக்கிச் செல்ல கணவனை இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் ரமா.
“உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கா? பத்து லட்சம்! முழுசா பத்துலட்சத்தை தூக்கிக் கொடுத்திட்டீங்க! உங்கப்பா என்ன கோடிக்கணக்கில சொத்து வெசசிருக்கிறாரா?”
“ஆமா ரமா! கோடிதான். ஒரு கோடி இல்ல. நாலு கோடி!”
“எ.ன்..ன? நாலு கோடியா?”

“ஆமா! பத்து ஏக்கர் நஞ்சை… அப்புறம் தென்னந்தோப்பு. அப்புறம் கிழக்கால அஞ்சாறு ஏக்கர் கிடக்கு.”“சரி சரி! எவ்வளவு சொத்து இருந்தாலும் இந்த பெரிசுகளுக்கு பத்து லட்சம் கொடுக்கணுமா? இதை எண்ணிப் பார்க்கக்கூட தெரியாது. எப்படி செலவுபண்ணுவாங்க?”“இதை செலவு பண்ணவும் முடியாது” – ஆனந்தன் குரலை தழைத்துக் கொண்டு சொல்ல, நெற்றியைச் சுருக்கினாள் ரமா.“என்னங்க சொல்றீங்க?”

“ரமா! இன்னும் ரெண்டு நாள்ல
ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு எல்லாம் செல்லாது.”
“அய்யய்யோ! என்ன சொல்றீங்க?”

“அப்பவே கவர்மென்ட் அறிவிச்சுதே. மறந்திட்டியா?”
“அய்யோ! நானும் அமுதனும் நிறைய ரெண்டாயிரம் ரூபா வெச்சிருந்தோமே!”
“அதுதான் இது!”
“என்ன? இது… எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“நேத்திக்கு பீரோவில் துணி எடுக்கும் போது பார்த்தேன். எண்ணிப் பார்த்தால் பத்து லட்சத்துக்கு மேலே இருக்கு. ஏன்டி! நாளுபூரா சீரியல் பார்க்கிறியே… ஒரு நாளாவது நியூஸ் பார்க்கிறியா? நீயும் உன் உருப்படாத புள்ளையும் எனக்குத் தெரியாம இவ்வளவு பணத்தை திருடி பதுக்கி வெச்சிருக்கீங்க! நல்ல வேளை நான் பார்த்தேன். இல்லேன்னா மொத்தப்பணமும் வேஸ்ட் பேப்பராகியிருக்கும்.”“அச்சச்சோ!”

“சரிவிடு! இப்ப இந்த பணம்தான் நம்ம முதலீடு. இதை அப்பாகிட்ட கொடுத்திட்டு மொத்த சொத்தையும் நம்ம பேருக்கு மாத்திட வேண்டியதுதான். கண்ணுக் கெட்டின தூரம்வரை நம்ம இடம்தான். இதை பிளாட் போட்டு வித்தால் கோடி கோடியாய் அள்ளலாம்.“அடேயப்பா! உங்க மூளையே மூளை!” – ரமா சிலாகித்த நேரம் வெளியே
மரகதத்தின் குரல் கேட்டது.“ஆனந்தா! சாப்பிட வாப்பா!”மூக்கு முட்ட சாப்பிட்டு முடித்த பிறகு ஆனந்தன் மீண்டும் பேச்சைத் துவங்க, கார்மேகம் மனைவியை அழைத்தார்.
“மரகதம்! சாமி மாடத்தில புள்ள தந்த பணம் இருக்கு எடுத்து வா!” என்றதும் பதறிப்போயினர் இருவரும். “அப்பா! அது… உங்களுக்குத்தாம்ப்பா!

“எங்களுக்கு என்னத்துக்குப்பா இம்புட்டு காசு! வயிறார சாப்பாடு போட தோட்டம் இருக்கு. உடம்புக்கு எதுனா வந்தால் உதவுறதுக்கு சொந்த பந்தம் இருக்கு. நிம்மதியாய் தூங்கியெழ நம்ம வீடு இருக்கு. இதையெல்லாம் விட உழைக்கிறதுக்கு உடம்புல தெம்பும் ஆரோக்கியமும் இருக்கு. எங்களுக்கு எதுக்கு உம்பணம். அது உன்கிட்டயே இருக்கட்டும். குடுத்திடு மரகதம்!” – என்றதும் மகனின் கையில் பணக்கட்டுக்களை வைத்தாள் மரகதம்.ஆனந்தனும் ரமாவும் திருதிருவென விழிக்க, தோளில் துண்டைப் போட்டவாறே எழுந்து கொண்டார் கார்மேகம்.

“இதோ பாருப்பா! இத்தினி வருஷமா எங்க நினைப்பு உனக்கு வரல. இப்ப எப்படி வந்ததுன்னும் எனக்குத் தெரியும்! நான் உயில் எழுதினது எழுதினதுதான். நான் முந்துறேனோ உன் அம்மா முந்துவாளோ! எங்ககாலம் வரைக்கும் இந்தச் சொத்துக்களை யாருக்கும் தரப்போறதில்ல. எங்களோட இறுதி மரியாதையை நீ செய்தால் உனக்கு பாதி சொத்து கிடைக்கும். இல்ல… உனக்கு இங்கே வர நேரமில்லன்னா நம்ம வயல்ல வேலை செய்யுற புள்ளைகளே அதைச் செய்யட்டும். மொத்தச் சொத்துக்களையும் அவங்களே எடுத்துக்கட்டும்.

இத்தினி வருஷமா உழுது விளைய வெச்சவுக அவுக தானே? இடையில எவனும் வந்து பிளாட் போட்டு விக்கமுடியுமா? பெத்த கடனுக்கு உனக்கு பாதி சொத்து எழுதி வெச்சிருக்கேன். மத்ததெல்லாம் அவுகளுக்குத்தான். வந்த வேலை முடிஞ்சதுன்னா நீ புறப்படு! நாங்க வயலுக்கு போவணும்.ம். அப்புறம் மருமவளே! இது நீ கஷ்டப்பட்டு சேர்த்த காசு! இதை நீயே வெச்சுக்க. நேரம் கிடைக்கும் போது நீயும் உன் பிள்ளையும் கப்பல் செய்து விளையாடுங்க” – கார்மேகம் சற்றே அலட்சியப் புன்னகையோடு சொல்ல, இருவரின் முகமும் இருண்டு போனது.

“ஊரு நாட்டுப் பக்கம் இருந்தா எங்களுக்கெல்லாம் நாட்டு நடப்பு தெரியாதா? பயபுள்ளகளுக்கு நினைப்பப் பாரு” – கார்மேகம் முணுமுணுத்தவாறே சொல்லிக் கொண்டே விலகி நடக்க, ஆனந்தனின் கையிலிருந்த பணக்கட்டு வெற்றுக் காகிதமாய் அவனைப் பார்த்து சிரித்தது.

தொகுப்பு: சொ.கலைவாணி சொக்கலிங்கம்

 

The post சிறுகதை-வெற்றுக் காகிதம்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Bangalore ,KASHTAMA IRUKUPPA ,
× RELATED பிரசவத்துக்குப் பிறகான செப்சிஸ்…