நன்றி குங்குமம் தோழி
பள்ளிக் காலங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிப்பட்ட புத்தகம் இருக்கும். அதனை முழுமையாக படித்தாலே போதும். ஆனால் கல்லூரியில் பாடத்திற்கு ஏற்ப தனிப்பட்ட புத்தகங்கள் இருக்காது. அந்தப் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய பல புத்தகங்களை ஆசிரியர் பரிந்துரைப்பார். அதற்கு ஏற்ப குறிப்பு எடுத்துதான் படிக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பாடக்குறிப்புகளை நாம் சரியாக வைத்துக் கொண்டால்தான் தேர்வுக்கு தயாராக முடியும்.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் உணவியலில் உள்ள பல்வேறு தலைப்புகளில் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு எளிதாக புரியும்படி சுருக்கமாக எழுதியுள்ளார் சென்னையை சேர்ந்த பேராசிரியர் லக்ஷ்மி. இவரின் புத்தகங்கள் மாணவர்களுக்கு மட்டுமில்லாது உணவியல் குறித்து தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்குமானது. இவருடைய புத்தகங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மிகவும் எளிய நடையில் தேவையான அனைத்து தகவல்களும் உள்ளதால் இவர் எழுதிய புத்தகங்களும் பெரும்பாலான மாணவர்களின் விருப்பத் தேர்வாக உள்ளன.
“நான் படிக்கும் காலத்தில் உணவியல் சார்ந்த புத்தகங்கள் எல்லாமே பெரியதாகவும் நிறைய தகவல்கள் கொண்டதாக இருக்கும். அவற்றிலிருந்து எங்களின் பாடத்திற்கு தேவையான குறிப்புகளை எடுத்துதான் பேராசிரியர் பாடங்களை நடத்துவார். அவர் நடத்தும் போது மிகவும் கவனமாக எல்லா குறிப்புகளையும் தவறாமல் எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு புத்தகங்களை அடிப்படையாக வைத்து குறிப்புகளை எடுப்பதால், அதில் இருக்கும் ஒவ்வொன்றையும் கை வலிக்க எழுத வேண்டும். மேலும் ஊட்டச்சத்து தொடர்பான பாடங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்பட்டன.
அதனை நம்முடைய பாடத்திற்கு ஏற்ப எளிய முறையில் மாற்றி அதன் பிறகுதான் குறிப்புகளை எடுத்து படிக்க வேண்டும். நான் படித்து முடித்து பேராசிரியரான போதும் இதே நிலைதான் இருந்தது. நாங்க படிக்கும் போது சந்தித்த அதே சிரமங்களை என் மாணவர்களும் சந்தித்தார்கள். இதற்கு ஒரு தீர்வு கொடுக்க விரும்பினேன். உணவியல் தொடர்பான எல்லா தகவல்களையும் ஆராய்ந்து நம்முடைய பாடத்திற்கு ஏற்ற தகவல்களை மட்டும் சேகரித்தேன்.
பிறகு அதனை உணவியல் சார்ந்த அந்தந்த பாடக்குறிப்புகளாக வடிவமைத்தேன். காரணம், வெளிநாட்டு புத்தகங்களில் நம் இந்திய உணவுமுறை பற்றி இருக்காது. ஆனால் அதில் குறிப்பிட்டு இருப்பதை மையக்கருவாக எடுத்துக் கொண்டு அதனை நம்முடைய உணவு மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப பாடங்களாக வடிவமைத்தேன். மேலும் ஊட்டச்சத்து அறிவியல் பற்றின தகவல்களையும் உண்மைகளையும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதினேன். நான் எழுதிய குறிப்புகளை என் மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுத்தேன். அப்போதுதான் என் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் இந்திய மாணவர்கள் அனைவருக்கும் உணவியல் குறித்த பாடங்கள் எளிதாக கிடைக்கும்படி செய்ய வேண்டும் என தோன்றியது’’ என்றவர் இந்த பாடப்புத்தகங்களை வெளியிட்டதே ஒரு சுவாரஸ்யமான கதை என்கிறார்.
‘‘ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது என் முன் மாணவர்கள் அவர்களின் ரெக்கார்ட் புத்தகங்களை வைத்திருந்தார்கள். அதில் நோட்டுப் புத்தகங்களின் இடுக்கில் வண்ணமயமான ஒரு சிறிய புத்தகம் சொருகப்பட்டு இருந்தது. அது என்ன என்று பார்த்த போது, அதில் ஒரு புத்தக வெளியீடு நிறுவனத்தின் பெயர் பதிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் எனக்கு தோன்றியது. மாணவர்களுக்காக நான் எடுத்து கொடுக்கும் குறிப்பினை ஏன் பாடப் புத்தகமாக வெளியிடக்கூடாது என்று. உடனே பதிப்பகம் ஒன்றை தொடர்பு கொண்டேன்.
ஆனால், அவர்களுக்கு இது போன்ற தலைப்பில் புத்தகங்கள் வெளியிட்டால் அது விற்பனையாகுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. ஆனால் எனக்கு மட்டும் கண்டிப்பாக அவர்கள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பதிப்பகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். உணவியல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான எளிய நடையில் அவை இருந்ததால் புத்தகங்களின் தேவை இருப்பதை அவர்கள் புரிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து என்னுடைய முதல் பதிப்பு புத்தகங்கள் வெளியானது. அந்தப் புத்தகங்கள் வெளியாகும் வரை நானும் புத்தகங்களை எழுதி வெளியிடுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. முதல் பதிப்பு புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு பூரிப்பாக இருந்தது” என்றவர், தன்னுடைய 79 வயதிலும், மேலும் புத்தகங்களை எழுதிக்கொண்டும் பழைய பாடப்புத்தகங்களை புதுப்பித்தும் வருகிறார்.
“என்னுடைய முதல் பதிப்பு புத்தகங்கள் ெவளியானதும், என் கல்லூரியில் அதையும் உணவியல் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களாக பயன்படுத்த பரிந்துரைத்தனர். ஒவ்வொரு புதிய பதிப்பிலும் மேலும் புது தகவல்களை சேர்த்தும், திருத்தியும் வெளியிடுவேன். புத்தகங்கள் பரவலாக சென்றடைந்ததும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் என் புத்தகங்களும் பரிந்துரை செய்யப்பட்டன. இப்போது இந்தியாவின் பல்வேறு கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் என் புத்தகங்களையும் மாணவர்கள் பாடப் புத்தகமாக படிக்கிறார்கள். உணவு அறிவியலை மாணவர்கள் எளிமையாக படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
பாடத்திட்டங்கள் பொறுத்தவரை அவை ஒவ்வொரு ஆண்டும் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு புத்தகம் வெளியிட்டாச்சு என்று இருக்க முடியாது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களை பாடங்களில் புகுத்த வேண்டும். அறிவு என்பது ஒரு பெரிய கடல். இதனை மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நான் மேலும் கற்கும் விஷயங்களையும் தெரிந்துகொள்ளும் தகவல்களையும் சம்பந்தப்பட்ட பாடப்புத்தகங்களில் இணைத்து புதுப்பித்து வருகிறேன். ஒவ்வொரு பதிப்பும் மாணவர்களுக்கு உபயோகமாக இருப்பதைப் பார்க்கும் போது, மேலும் நிறைய எழுதணும் என்ற உத்வேகத்தை தூண்டுகிறது. என்னிடம் படித்த மாணவர்கள் பலரும் மருத்துவமனைகளிலும், பிரபலமான உணவகங்களிலும், உணவு விடுதிகளிலும் பணிபுரிகின்றனர்” என்று நெகிழ்ந்தார்.
இவர், உணவியல் (Dietetics), உணவு அறிவியல் (Food Science), ஊட்டச்சத்து அறிவியல் (Nutrition Science), சமூக ஊட்டச்சத்துவியல் (Community Nutrition), பயன்பாட்டு ஊட்டச்சத்துவியல் மற்றும் உணவியல் (Applied Nutrition and Dietetics), மனித ஊட்டச்சத்துவியல் (Human Nutrition), உணவு கோட்பாடு மற்றும் ஊட்டச்சத்துவியல் (Principles of Food and Nutrition Science) போன்ற பாடப்பிரிவுகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். “உணவியல் படிப்பு மிகவும் முக்கியமானது. அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் அதிக தேவையாகவும் உள்ளது. இந்த துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகம். உணவு எங்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவர்களுக்கு வேலை உண்டு.
மிகவும் ஆர்வத்துடன் படிக்கக்கூடிய படிப்புகளுள் இதுவும் ஒன்று” என உணவியல் படிப்பை பற்றி பேசிய ஸ்ரீ லக்ஷ்மி, தொடர்ந்து ஊட்டச்சத்துமிக்க உணவுமுறையின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்தார். “ஊட்டச்சத்துமிக்க உணவுதான் நம்மை தொடர்ந்து இயங்க வைக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நம் உடலுக்குத் தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றனவா என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஒரு சமூகம்தான் ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும். உதாரணமாக கோவிட் தொற்று காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களே அதிகம் தாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய உணவினை உட்கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் சொல்லப்பட்டது. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவுமுறை என்பது மனிதனின் முக்கிய தேவையாக உள்ளது.
சரியான ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை அதிக விலையில்தான் விற்கிறார்கள். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மிக சுலபமாக நம் கைகளில் கிடைக்கும் உணவுப்பொருட்களிலேயே போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆரோக்கியமான உணவு விலை அதிகம். அதனால் சாப்பிட முடியவில்லை என்று சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
உதாரணத்திற்கு தாளிக்க பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகளை யாரும் உணருவதில்லை. இது போன்ற ஆரோக்கியமான உணவுகள் எளிதாக நம் கையில் உள்ளன. நாம்தான் உணவில் சேர்த்துக்ெகாள்ள வேண்டும். இது போன்று மேலும் உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களும் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை குறித்து என் புத்தகத்தில் எளிய நடையில் எழுதியுள்ளேன். இது மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் படித்து பயன்பெறலாம்” என்கிறார் ஸ்ரீ லட்சுமி.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post ஆரோக்கிய உணவுகள் நம் கைக்குள் அடங்கியுள்ளது! appeared first on Dinakaran.