ஆரணி, அக்.29: ஆரணி அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக பலியானார். ஆரணி அடுத்த ராந்தம்கொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(70), விவசாயி. இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு செல்வதாக அவரது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் நிலத்திற்கு சென்று தேடினர். அப்போது, அவரது விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி வெங்கடேசன் பலியாகி கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வெங்கடேசனின் மகன் செந்தில்குமார்(38) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு போலீசார் விசாரணை ஆரணி அருகே நிலத்தில் அறுந்து கிடந்த appeared first on Dinakaran.