×

கார்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி பலி மகன், மகள் படுகாயம் கண்ணமங்கலம் அருகே சோகம்

கண்ணமங்கலம், டிச.30: கண்ணமங்கலம் அடுத்த பெரிய அய்யம்பாளையம் கூட்ரோட்டில் நடந்த கார் விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தர்(44), மெக்கானிக். இவரது மனைவி சங்கீதா(35), மகன் அஜய்(15), மகள் கனிஷ்கா (13). இவர்கள் நான்கு பேரும் நேற்று காலை 7 மணிக்கு திருவண்ணாமலைக்கு காரில் சென்றனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த பெரிய அய்யம்பாளையம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 கார்களின் முன்பகுதியும் சுக்குநூறாக நொறுங்கியது.

இதில் காரை ஓட்டி வந்த தர் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய ஆந்திராவை சேர்ந்த காரில் இருந்தவர்கள் விபத்து நடந்தவுடன் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சங்கீதா சிசிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அஜய், கனிஷ்கா மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இறந்த ஸ்ரீதரின் அண்ணன் ஜெகன்(47) கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் பிள்ளைகள் ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கார்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி பலி மகன், மகள் படுகாயம் கண்ணமங்கலம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Periya Ayyampalayam road ,dhar ,Nelvai village ,Kaniyambadi ,Vellore district ,Sangeetha ,Ajay ,
× RELATED படவேடு தாமரை ஏரி நிரம்பியது: கிராம மக்கள் சிறப்பு பூஜை