×

₹58.19 கோடியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிடம் * வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டுக்கு வருகிறது * 800 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கும் வசதி திருவண்ணாமலையில் 4.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படுகிறது

திருவண்ணாமலை, அக்.29: திருவண்ணாமலையில் ₹58.19 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிக்கான புதிய கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளி பயன்பாட்டுக்கு வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், மருத்துவம், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற நோக்கத்திற்குகாக, மாவட்டந்தோறும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளை அரசு உருவாக்கி வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை சண்முகா அரசு தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 346 மாணவ- மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு ேபாதுமான கட்டிட வசதியும், விடுதி வசதியும் இல்லை. அதனால், கூடுதல் மாணவர்களை சேர்க்க இயலாத நிலை இருக்கிறது. எனவே, திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளிக்கு விடுதிகளுடன் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டுவதற்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நபார்டு நிதியுதவியுடன் ₹58.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சியில் அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான கட்டுமான பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, தற்ேபாது அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிகளுக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை புதிய ரிங்ரோடு பகுதியையொட்டி அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளி கட்டிடம் 52,675 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. பள்ளி வகுப்பறைகள் தரைதளம் மற்றும் 2 அடுக்குகளும், விடுதி கட்டிடம் தரை தளம் மற்றும் 4 அடுக்குகளும் கொண்டதாக பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. அதில், 22 வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகங்கள், நூலகம், கணினி அறை, அலுவலகம், கூட்ட அரங்கம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும், மாணவர் விடுதியில் 400 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் 73,171 சதுர அடி பரப்பளவில் மாணவர் விடுதியும், 400 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் 73,171 சதுர அடி பரப்பளவில் மாணவிகள் விடுதியும் உள்பட மொத்தம் 1.99 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. அதேபோல், மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் தலா 63 அறைகள், வரவேற்பு அறை, விடுதி காப்பாளர் அறை, பொது அறை, நூலகம், மின் அறை, மின்தூக்கி(லிப்ட் வசதி), சமயலறை, சலவை அறை, சமையற்கூடம், சேமிப்பு அறை, குளியலறை மற்றும் கழிப்பறைகள் அமைகின்றன.

திருவண்ணாமலையில் பிரமாண்டமாக அமையும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் 2024-2025ம் கல்வி ஆண்டில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், திருவண்ணாமலையில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில், கடந்த ஆண்டு மட்டும் 49 மாணவர்கள், மருத்துவம், ஐஐடி நிறுவனத்தில் பொறியியல் கல்வி உள்ள்ளிட்ட உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். எனவே, புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தால், மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.

The post ₹58.19 கோடியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிடம் * வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டுக்கு வருகிறது * 800 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கும் வசதி திருவண்ணாமலையில் 4.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Government Model High School ,Tiruvannamalai ,Thiruvannamalai ,model high school ,
× RELATED காதல் மனைவியை தாக்கி சுவற்றில் மோதி...