- நொச்சிலி பஞ்சாயத்து
- திருவள்ளூர்
- போத்ததுர்பேட்டை நகராட்சி
- மக்கள் குறை தீர்க்கும் நாள்
- திருவள்ளூர் மாவட்டம்
- பள்ளிப்பட்டா தாலுக்கா
திருவள்ளூர், அக். 29: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் சேரும் குப்பைக் கழிவுகளை நொச்சிலி ஊராட்சியில் சுத்திகரிப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, நொச்சிலி ஊராட்சியில் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயத்தை நம்பியே பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 20 ஆயிரம் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ள நிலையில் இங்கு சேரும் குப்பைக் கழிவுகளை இதுவரை அந்த பேரூராட்சியில் சுத்திகரிப்பு செய்து வந்தனர்.
இந்நிலையில், பொதட்டூர் பேரூராட்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள நொச்சிலி கிராமத்தில் கசடு, கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நொச்சிலி ஊராட்சியில் உள்ள எகுவாமிட்டூர், தர்மராஜா கோயில், கீமிட்டூர், வட்டியூர், வெங்கடாபுரம், மேல்நெடிகளூர், மேல்நெடிகளூர் காலனி, நொச்சிலி, நொச்சிலி காலனி, காப்பூர் கண்டிகை, அம்பேத்கர் காலனி கார்குலூர் ஆகிய 10 கிராமத்தை கடந்து வந்து கசடு, குப்பைக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலம் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு உகந்ததாக இருப்பதால் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள நிலத்தை பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என நொச்சிலி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். நொச்சிலி ஊராட்சியில் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பதால் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றி அமைக்க மறுபரிசீலனை செய்யப்படும் என கலெக்டர் த.பிரபுசங்கர் உறுதி அளித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
The post நொச்சிலி ஊராட்சியில் குப்பைக் கழிவுகளை சுத்திகரிக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.