×

ரூ.1.45 லட்சம் கோடி முதலீடு இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஹப்பாக மாறும் தூத்துக்குடி

*  ஆண்டுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய இலக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாகி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்பிக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தூத்துக்குடிக்கு ரூ.1,40,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை நகரமாக மாறி வரும் தூத்துக்குடியில் அடுத்தடுத்து புதிய முதலீடுகள் குவிந்து வந்தாலும், பல மாதங்களாக கிரீன் ஹைட்ரஜன் திட்டத்தில் பெரிய செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, ஏற்றுமதி என்பது இந்தியாவுக்கு புதியது என்பதால் இத்துறைக்கான அடிப்படை கட்டமைப்பை திறம்பட அமைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் இலக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் உற்பத்தித்துறை வளர்ச்சி அடைய துவங்கிய வேளையில் எரிபொருள் தேவை அதிகமாகியுள்ளது. இதே வேளையில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தான் சோலார், காற்றாலை, முதல் கிரீன் ஹைட்ரஜன் என புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்ய, இந்தாண்டு தொடக்கத்தில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த தொழிற்சாலைக்கு கடந்த ஆக.21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது உற்பத்தி தளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.100 கோடி மதிப்பில் தூத்துக்குடி துறைமுக பகுதியில் 160 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் பசுமை அமோனியா/ பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலை அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷு எலக்ட்ரிக் பவர் ஆகிய நிறுவனங்களுக்காக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஆலை அமைப்பதற்கு முதற்கட்ட இன்ஜினியரிங் டிசைன் பணிக்கான ஒப்பந்தம், இத்தாலியை தலைமையிடமாகக் கொண்ட மெய்ரே (Maire) நிறுவனத்தின் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான பிரிவான டெக்னிமொன்ட் (Tecnimont) மற்றும் சஸ்டெயினபிள் டெக்னாலஜி நிறுவனமான நெக்ஸ்ட்கெம் (Nextchem) ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டெக்னிமொன்ட் – நெக்ஸ்ட்கெம் உருவாக்கும் முதற்கட்ட டிசைன் அடிப்படையில் தூத்துக்குடியில் கிரீன் அமோனியா/ ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2027 முதல் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை துவங்கவும் செம்ப்கார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்த தமிழ்நாட்டையும் பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற தூத்துக்குடி ஆதாரமாக மாறி உள்ளது. ரூ.1.45 லட்சம் கோடி முதலீடு: தூத்துக்குடியில் தற்போது கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்க ஏசிஎம்இ (ACME) நிறுவனம் ரூ.52,000 கோடியும், பெட்ரோனஸ் (Petronas) நிறுவனம் ரூ.34,000 கோடியும், செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனம் ரூ.36,238 கோடியும், லீப் கிரீன் எனர்ஜி (Leap Green Energy) நிறுவனம் ரூ.22,842 கோடியும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதோடு ஒன்றிய அரசின் என்டிபிசி (NTPC) கிரீன் ஹைட்ரஜனுக்காக மாபெரும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. ஒன்றிய அரசு ஏற்கனவே வஉசி துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலீடு செய்யவுள்ள 4 நிறுவனத்தில் செம்ப்கார்ப் மற்றும் லீப் கிரீன் எனர்ஜி ஆகியவை தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வந்துள்ளது. இதன் மூலம் தென்மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

* சென்னைக்கு அடுத்து பொருளாதார தலைநகர்
தூத்துக்குடி பொருளாதாரத் தலைநகராக மாறிவரும் சூழலில் அடுத்த பத்தாண்டுகளில் அதன் மக்கள்தொகை மூன்று முதல் 5 மடங்காகப் பெருகிவிடும் வாய்ப்புள்ளது. தொழில் தேடி சென்னை வரத்துடிக்கும் தென்னகத்து மக்களின் மாற்று இலக்காக அந்நகரம் மாறிவிடும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

* 2030க்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
நாட்டின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவும் வகையில், சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

பெட்ரோலிய மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தியாகும் ஹைட்ரஜனில் இருந்து, பசுமை ஹைட்ரஜனுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி, நீரில் உள்ள ஹைட்ரஜனை தனியாக பிரித்தெடுக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 2030க்குள், இந்தியா தன் எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

* திட்டங்களுக்கு கட்டண விலக்கு
ஒன்றிய அரசு தனது பசுமை ஹைட்ரஜன் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க, மலிவான புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் மூலமான, மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத்திற்கு 25 ஆண்டுகள் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2025 ஜூன் மாதத்திற்கு முன் தொடங்கும் திட்டங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு கிடைக்கும். 2030க்குள் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

* உலகளவில் முத்திரை பதிக்கும் தமிழகம்
செம்கார்ப் நிறுவன கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி பொதுமேலாளர் ரீமா பர்தன் கூறுகையில், ‘புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகளுடன், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் லட்சியங்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முயற்சிகள் தமிழகத்தில் ஒன்றிணைந்து உலகளாவிய பசுமையான ஹைட்ரஜன் தொழிற்துறையில் முத்திரை பதிப்பதில் செம்ப்கார்ப் நிறுவனம் பெருமை கொள்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.36,238 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை இதுவே ஆகும். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் உலக நாடுகளின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பும்’ என்றார்.

* புதிய மின்நிலையங்கள்
தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை உள்ளடக்கிய முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பசுமை ஹைட்ரஜன் ஆலைகளுக்காக புதிதாக சூரியசக்தி, காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல ஒன்றிய அரசின் மின்தொடரமைப்பு நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடியில் ஏற்கனவே உள்ள துணைமின் நிலையத்தில் தலா 1,500 மெகா வோல்ட் ஆம்பியர் திறனில் 3 பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட உள்ளன.

இதன்மூலம், 3,600 மெகாவாட் மின்சாரத்தைக் கையாள முடியும். தூத்துக்குடியில் உற்பத்தியாகும் மின்சாரம் தர்மபுரி வழியாக கர்நாடக மாநிலம் மதுகுரியில் உள்ள 765 கிலோ வோல்ட் துணைமின் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இதற்காக, தூத்துக்குடி, தர்மபுரி, மதுகுரி இடையே உள்ள மின்வழித் தடங்களின் திறன் அதிகரிக்கப்பட உள்ளன. இதன் மொத்த திட்ட செலவு ரூ.2,617 கோடி ஆகும்.

* எரி ஆற்றலாக செயல்படும் மாசு குறையும்
பசுமை ஹைட்ரஜன் என்பது ஒரு வகையான தூய எரியாற்றல். இது சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கவல்ல எரியாற்றலைப் பயன்படுத்தி, தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் வழியாக மின்சாரம் கடத்தப்படும்போது ஹைட்ரஜன் உற்பத்தியாகிறது. இந்த ஹைட்ரஜன் பல விஷயங்களுக்கு எரியாற்றலாக செயல்படும். ஹைட்ரஜனை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மின்சாரம் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களிலிருந்து வருகிறது.

அதனால் மாசு ஏற்படாது. அதனால்தான் இது பசுமை ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு, உரம், எக்கு மற்றும் சிமென்ட் போன்ற கனரக தொழில்துறைகளை, கார்பன் இல்லாத ஒன்றாக ஆக்கிட இது உதவும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் இது உதவியாக இருக்கும். எக்கு மற்றும் இரும்பு மிகவும் மாசுபடுத்தும் தொழில்களில் ஒன்றாகும். இது உலகின் மொத்த பசுமைக்குடில் வாயு உமிழ்வில் ஏழு சதவிகிதம் ஆகும்.

கார்கள் தயாரிப்பது முதல் பாலங்கள் கட்டுவது வரை எக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 2050க்குள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் மொத்த கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் இந்தத் தொழிலின் பங்களிப்பு 35 சதவிகிதமாக உயரும். எக்குத் தொழில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தொடங்கினால், இந்த கார்பன் வெளியேற்றம் கிட்டத்தட்ட நின்றுவிடும். இந்தியாவில் மாசுக்கட்டுப்பாட்டு விஷயத்தில் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

* தயாரிப்பது எப்படி?
ஹைட்ரஜன் வாயு தண்ணீரில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது, தண்ணீரின் மூலக்கூறில் இருக்கும் H20வை தனியாகப் பிரிப்பதன் மூலம் ஹைட்ரஜன் வாயுவை உருவாக்க முடியும். இது எலக்ட்ரோலிசிஸ் மூலம் உருவாக்கப்படுகிறது, ஆனால் இந்த எலக்ட்ரோலிசிஸ் இயக்க மின்சாரம் தேவை, இதில் பயன்படுத்தும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக இருந்தால் இதுதான் கிரீன் ஹைட்ரஜன். கிரீன் ஹைட்ரஜன் வாயு மற்றும் காற்றில் இருந்து பிரிக்கப்படும் நைட்ரஜன் ஆகியவற்றை அதிகப்படியான வெப்பம் மற்றும் அழுத்தம் மூலம் கிரீன் அமோனியா உருவாக்கப்படும்.

கிரீன் அமோனியா உருவாக்க ஹைபர் பிராசஸ் என்னும் முறை பயன்படுத்தப்படும். லித்தியம் பேட்டரிகளால் பெரிய அளவில் ஆற்றலை சேமிக்க முடியாது. இருப்பினும், இது தற்போது மின்சார வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பசுமை ஹைட்ரஜனை மிகப் பெரிய அளவில் சேமிக்க முடியும். நீண்ட தூரம் செல்லும் டிரக்குகள், பேட்டரியால் இயங்கும் கார்கள், பெரிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ரயில்கள் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாக இருக்கும்.

* பசுமை ஹைட்ரஜன் என்ன பயன்?
தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உரங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில், ஹைட்ரஜன் ஒரு முக்கிய உள்ளீடு. பசுமை ஹைட்ரஜன் மற்ற தொழிற்சாலைகளின் மொத்த உமிழ்வைக் குறைக்க உதவும். நிலக்கரி எரிசக்தி ஆதாரத்தை குறைக்கும். உமிழ்வைக் குறைக்க எக்கு உற்பத்தியிலும் இதைப் பயன்படுத்தலாம். இப்போது வரை, சுத்தமான மின்சாரத்திற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில், நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், தொழிற்துறை மற்றும் போக்குவரத்து துறை, நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கு மாற, நமக்கு சுத்தமான எரிபொருள் தேவை. பசுமை ஹைட்ரஜன் இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்’ என்றனர்.

The post ரூ.1.45 லட்சம் கோடி முதலீடு இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஹப்பாக மாறும் தூத்துக்குடி appeared first on Dinakaran.

Tags : India ,Thoothukudi ,South India ,Spike ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதால் முதிரப்புழை ஆறு மாசடையும் அவலம்